விசேட தேவையுடையோருக்கான தொழில் சந்தை மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் .......
சமூகத்தில் விசேட தேவையுடையோரைப் புறக்கணிக்காமல், அவர்களுக்கான சம அந்தஸ்தையும் முன்னுரிமையையும் வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்த வேண்டியது நமது சமூகக் கடமையாகும். அவர்களைத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீட்டு, பொருளாதார சுயசார்பை அளித்து உரிமையோடு வாழ வழிவகை செய்யும் உயரிய நோக்கில், மட்டக்களப்பில் விசேட தேவையுடையோருக்கான விசேட தொழில் சந்தை நிகழ்வு 23.07.2026 இடம்பெற்றது.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், சமூக சேவைத் திணைக்களமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வு, மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
மாவட்ட இணைப்பாளரும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தருமான V. மைக்கல் கொலின் வரவேற்புரையாற்றி, சமூகத்தில் விசேட தேவையுடையோருக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறியதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உதவி மாவட்டச் செயலாளர் ஜீ.பிரணவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, தொழில் வழிகாட்டல் இணைப்பாளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான A.கருணாகரன், நிகழ்வில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்கள் குறித்த சுருக்கமான அறிமுக உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனமான Brandix, Lootha Garment மற்றும் Altra Aluminium Pvt Ltd ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. வருகை தந்திருந்த நபர்களின் கல்வித் தகுதி மற்றும் தொழில் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சுருக்கமான நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன.




No comments:
Post a Comment