கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ...............
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (06) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது என குறிப்பிட்டதுடன், வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்கள் 9000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுகின்ற பயணிகளுடைய பதிவுகள் குறிகாட்டுவானில் மேற்கொள்ளபடுமெனவும், ஏனைய பிரதேசங்களிலிருந்து செல்லுகின்றவர்கள் கடற்பாதுகாப்பு கருதி தங்களுடைய பிரதேசங்களில் உள்ள கடற்படை முகாம்களில் தங்களுக்குரிய பங்குகளிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இம்முறை சாரணர்கள் 25பேர் வரை இத்திருவிழாவில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுதுடன், கடற் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள படகுகள் சேவை மற்றும் அவை புறப்படும் நேரங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆலயச்சூழல் துப்பரவு செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம், தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகள் (Dialog,mobital) ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J.ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி , யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment