சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் 14வது புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு .......................
கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு சங்காரவேல் பவுண்டேசன் ஏற்பாட்டில் 14வது அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு 02.03.2025 அன்று செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வெல்லாவெளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி மற்றும் நல்லிணக்க ஒருமைபாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், . சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே .ஹரிகரராஜ், திரு.திருமதி சுமன் சங்காரவேல் ( கணக்காளர் - லண்டன் ), செல்வி.கே.அர்ச்சனா, செல்வி.கே.அர்ச்சோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு சங்காரவேல் பவுண்டேசன் ஸ்தாபகர் சங்காரவேல் சுகுமார் அவர்களின் விளக்கவுரையைத் தொடர்ந்து ஆரம்பமானது. இவ்வருடம் மருத்துபீட மாணவருக்கு 15000 ரூபாவும், பொறியியல்பீட மாணவருக்கு 12000 ரூபாவும் வழங்குவதற்கு புலமைப்பரிசில் நிதி வழங்குநர்கள் முன்வந்துள்ளார்கள். இந்நிதி வழமை போன்று இவர்களின் கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் வழங்கப்படவுள்ளது. இதற்காக 5980000.00 வழங்கப்படவுள்ளது.
இம்முறை மருத்துவ பீட மாணவர்கள் 03 பேரும், பொறியியல் பீட மாணவர்கள் 05 தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மருத்துவ பீட கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பாண்டிருப்பைச் சேர்ந்த கே. கேணுஜா, மருத்துவ பீட யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான செட்டிபாளையத்தைச் சேர்ந்த A.ரசிக்காந், மருத்துவ பீட கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான வந்தாறுமூலையைச் சேர்ந்த N.அஜந்தன், பொறியியல் பீட யாழ்.பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலைக்குடாவைச் சேர்ந்த கே.விதுர்சன், பொறியியல் பீட யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மீராவோடை தமிழ் பிரிவு வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர்.அபிலக்சன், பொறியியல் பீட யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த எஸ்.டிலக்சன், பொறியியல் பீட மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான கொக்கட்டிச்சேலையைச் சேர்ந்த கே.இசையாளன், பொறியியல் பீட மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான கறுவாக்கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த எஸ்.றுக்சியா ஆகியோர் புலமைப் பரிசில் வழங்குவதற்காக சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினரால் அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான புலமைப் பரிசில் நிதியில் 03 மாணவர்களுக்கு யாழ் இணுவிலைப் பூர்வீகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் சிவகாமி பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர்களாக திரு.திருமதி பரமேஸ்வரன் குடும்பத்தினரும், 02 மாணவர்களுக்கு யாழ் வேலணையைப்; பூர்வீகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர்களாக திரு.திருமதி நிர்மலன்; குடும்பத்தினரும், தலா ஒரு மாணவருக்கு கல்லடியைப் பூர்வீகமாகக் கொண்ட தற்போது கன்பரா அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவலிங்கம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர்கள் திரு.திருமதி சோமஸ்கந்தன், கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் திரு.திருமதி கிரிசாந், கொக்கட்டிச்சோலை முனைக்காட்டைச் சேர்ந்த செல்வி மு. அர்ச்சனா, செல்வி மு. அர்ச்சோபனா ஆகியோர் இணைந்து ஒருவருக்கும் புலமைப் பரிசிலை வழங்குகின்றார்கள்.
இவர்களில் செல்வி.மு.அர்ச்சனா, செல்வி.மு.அர்ச்சோபனா ஆகியோர் சங்காரவேல் பவுண்டேசன் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் பெற்று அண்மையிலேயே தொழில் வாய்ப்பைப் பெற்று இன்னுமொரு மாணவருக்குப் புலமைப் பரிசில் வழங்க முன்வந்திருப்பது இத் திட்டத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகக் கருதப்படுகின்றது. இவர்களைப் போன்று இத்திட்டத்தில் இணைந்திருந்தவர்கள் 05 பேர் புலமைப் பரிசிலை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
இதுவரை கடந்த 14 ஆண்டுகளாக 112 பேருக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இவ்வருடத்துடன் சேர்த்து 120 பல்கலைக்கழக மாணவர்கள் புலமைப் பரிசில் பெற்றுள்ளார்கள். தற்போது இவ்வருடத்துடன் சேர்த்து 42 பேருக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இச்செயற்பாடுகள் அனைத்தும் லண்டன் லூசியம் சிவன் கோயிலை குடையாகக் கொண்டு இயங்கும் அறங்காவலர்களின் பங்களிப்புடனும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தனவந்தனர்களினதும், எம் இனத்தின் பால் பற்றுக் கொண்டு இலங்கையில் வாழும் நல் உள்ளம் கொண்டவர்களினதும், இவ் அமைப்பினூடாக புலமைப்பரிசில் பெற்று உயர்நிலையில் இருக்கும் நன்கொடையாளர்களின் நிதியினைக் கொண்டே புலமைப்பரிசில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பல வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்களது கல்விக்கும் மற்றும் ஏனைய கல்வி சார் திட்டங்களுக்கும் பாரிய நிதியில் பங்களிப்பு செய்வதுடன் அனைத்தையும் மேற்பார்வை செய்து வழி நடாத்திக் கொண்டிருக்கும் சங்காரவேல் பவண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் சங்காரவேல் சுகுமார் அவர்களுக்கு செட்டிபாளையம் கல்விச் சமூகத்தினரால் கருமயோகி எனும் சிறப்புப் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment