காத்தான்குடி பிரதேசத்திற்கான இவ்வாண்டின் முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம்................
காத்தான்குடி பிரதேசத்திற்கான இவ்வாண்டின் முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் (10) காலை 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் ஏற்பாட்டில் இப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
கடந்த முறை இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, பிரதேச கோட்டக் கல்வி அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம்இ கால்நடைத் திணைக்களம், தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச்சபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி மின்சார சபை போன்ற திணைக்களத்தின் அதிகாரிகள் அனைவரிடமும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கடந்த கால திட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகள், பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்பட்ட நிதியூடாக ஒதுக்கீடு செய்யப்பட பொருட்கள் வழங்கப்படாது பணத்தினை திருப்பி அனுப்பிய விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.நழீம், தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.பீ.எம். பிர்தெளஸ், திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகளின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீனவர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment