கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் : அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்................

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் : அரசாங்க அதிபர்  ஜே.ஜே.முரளிதரன்................

(வரதன்) ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் இன்று தமது சூழலை தூய்மைப்படுத்த பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் காட்டிவருவதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாவட்டத்தினை தூய்மைப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமாரவினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தில் இளைஞர்களின் சக்தியை ஒன்றுதிரட்டும் வகையில், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகமும் இணைந்து விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு ஊறணி வாவிக்கரை பூங்காவினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் நிசாந்தினி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான மா.சசிக்குமார், கி.சதீஸ்வரி, அ.தயாசீலன் மற்றும் பிரதேச செயலக பிரிவு இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள்,இளைஞர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Comments