மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி ஒளிந்தவர்கள் சஜித், அநுர; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.......
மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி ஒளிந்தவர்கள் சஜித், அநுர; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.......
அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாசவும், அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றவுடன், விவசாயிகளுக்கு உரம் வழங்குவதே தாம் செய்த முதல் காரியம் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த 04 போகங்களையும் வெற்றியடையச் செய்ததன் மூலம் நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரித்து வயல்களையும் சமையலறைகளையும் நிரப்பியதாக குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (23) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் இந்த பொதுக்கூட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் அமோகமாக வரவேற்றனர்.
முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினை குறித்தும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பியோர் நல்லடக்கம் செய்யவும், தகனம் செய்யவும், மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கவும் முடியுமான வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த நிலைமைக்கு முகம் கொடுத்த தரப்பினருக்கு இழப்பீடு வழங்க குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
மக்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள். விவசாயம் செய்ய முடியாமல் இருந்தார்கள். உரம் இருக்கவில்லை. எரிபொருள் இருக்கவில்லை. டீசல் இருக்கவில்லை. விவசாயம் செய்ய முடியாது. வாகனம் ஓட்ட முடியாது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. உணவு, மருந்துகள் இருக்கவில்லை. மக்கள் கஷ்டத்தில் வாழ்ந்தனர். நான் ஜூலை மாதம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது உரத்தை வழங்கி விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
ஐந்து போகங்களும் விதைக்கப்பட்டன. ஒரு முறை கூட கைவிடப்படவில்லை. வயலையும் நிரப்பினோம். சமையல் அறையும் நிரப்பினோம். இது தானே மக்களின் தேவை. எரிபொருள் வழங்கினோம். மருந்துகள் இருக்கின்றன. தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன.
பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது. சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். வியாபாரமும் தடையின்றி நடக்கிறது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. இன்னும் குறைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதனை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இன்னும் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். ரூபாவை வலுப் பெறச் செய்ய வேண்டும்.
நான் பொறுப்பேற்கும் போது டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாகும். தற்போது 300 ரூபா வரை குறைந்துள்ளது. மொத்த தேசிய உற்பத்தி 2019ஆம் ஆண்டு 89 பில்லியன் டொலர்களாக இருந்தது. ஆனால் நான் பொறுப்பேற்ற போது 76 பில்லியன் டொலர்களாக குறைந்திருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் இறுதியில் அது 84 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. எமது மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துஇ பணவீக்கம் குறைந்து பொருட்களின் விலைகளும் குறைந்தன.
இன்னும் நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளீர்கள். அதனை எப்படி வழங்கலாம்?. தேசிய உள்நாட்டு உற்பத்தியை 89 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். பணவீக்கத்தை 9 வீதமாக குறைக்க வேண்டும். ரூபா அப்போது இன்னும் வலுப்பெறும். ரூபா வலுப்பெற்றால் அதிக பொருட்களை வாங்க முடியும். மொத்த தேசிய உற்பத்தியை 92 பில்லியன் டொலர்களாக உயர்த்தினால் ரூபா மேலும் வலுப்பெறும். பொருட்களின் விலைகள் குறையும். யாருக்கு இந்த இலக்கை அடைய முடியும்?
உள்நாட்டு உற்பத்தியை யாருக்கு அதிகரிக்க முடியும். சஜித்தினால் முடியுமா? அநுரவிற்கு முடியுமா? அவர்களால் முடியாது. எதற்காக வாக்கு கோருகின்றனர். அவர்கள் நேரத்தை வீணடிக்காது வீட்டில் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்த போது ஓடிவிட்டார்கள்.
இவர்களுக்கு ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா? மக்கள் கஷ்டப்பட்டபோது தப்பியோடிவிட்டார்கள். எனக்கு ஒரேயொரு ஆசனம் தான் இருந்தது. எனினும், மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி இதனை ஏற்றுக்கொண்டேன். எமது வீடுகளிலும் குறைபாடுகள் இருந்தன. ஆனால் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டனர்.
முச்சக்கர வண்டியொன்றை ஓட்ட முடியாமல் கஷ்டப்பட்டனர். நீங்கள் இந்த கஷ்டத்தை அனுபவித்தீர்கள். இவற்றைப் பார்த்தும் ஏன் இந்தத் தலைவர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அரசாங்கத்தை பொறுப்பேற்க சொன்ன போது தப்பியோடிவிட்டார்கள். நான் பொறுப்பேற்றேன். நான் துரோகி என்று என்னைத் திட்டுகின்றனர். திருடர்களை பாதுகாப்பதாக அவர்கள் குற்றங்சாட்டுகின்றனர்.
உங்களின் சமையல் அறை, பணப் பை, வீட்டில் இருந்த நிலை குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை. சமுர்த்தி வழங்க பணமில்லை என்றார்கள். சமுர்த்திக்குப் பதிலாக அஸ்வெசும மூலம் மூன்று மடங்கு வழங்கினேன்.
24 லட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கினேன். உலக வங்கி எங்களுக்கு உதவியது. சில உதவிகள் தாமதமாகியுள்ளன. குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசியை தலா இரண்டு மாதங்களுக்கு வழங்கினோம். பாடசாலை மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினோம். வேறு என்ன செய்ய வேண்டும்.
முதியோருக்கான கொடுப்பனை அதிகரித்தேன். இவற்றை செய்ய ஏன் அவர்கள் என்னுடன் ஒன்றுசேரவில்லை. மக்களுடன் அவர்களுக்கு கோபம் இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். அநுரகுமாரவிற்கும், சஜித் பிரேமதாசவிற்கும் நீங்கள் ஏதாவது பிழை செய்துள்ளீர்களா? ஏன் அவர்கள் உதவ முன்வரவில்லை.
உங்களின் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வில்லை. தங்களின் பிரச்சினகளைப் பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். இதனை செய்ய முடியாது. இது தோல்வியடைந்தால் தங்களின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்தார்கள். தற்போது எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. அவர்களின் பெயர்கள் கெட்டுவிட்டன.
அவர்களுக்காகவா வாக்களிக்கப் போகிறீர்கள்? நான் 'உறுமய' காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினேன். கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவர்கள் வசிக்கும் அடிக்குமாடிக் குடியிருப்புக்களின் உரிமைகளை வழங்கினோம். மலையகத்தில் கிராமங்களை உருவாக்கி, வீடுகளை வழங்குவோம்.
ஏன் அவர்கள் இவற்றை செய்ய முன்வரவில்லை. ஏன் அவர்கள் இவற்றை முன்மொழியவில்லை. ஏன் அவர்கள் இது பற்றி பேசுவதில்லை. மக்கள் வாழ்வதற்கு காணி இருக்க வேண்டும். கோரளைப்பற்று உள்ளிட்ட இந்தப் பிரதேசத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன. நெருக்கடி இல்லாமல் காணிகளை அடையாளம் கண்டு காணிகளை வழங்க எமது புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம்.
முஸ்லிம் மக்களுக்கு அநீதி ஏற்பட்டது. முஸ்லிம்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்ய முடியாமல் தகனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருக்க நான் புதிய சட்டமொன்றைக் கொண்டுவருகின்றனர்.
விரும்பியோர் நல்லடக்கம் செய்யவும், தகனம் செய்யவும், விரும்புவோர் உடலை மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கவும் முடியும். அமைச்சர் அலி சப்ரி இந்தச் சட்டத்தை அமைச்சரவைக்கு கொண்டு வந்த பின்னர் நாம் வர்த்தமானியில் வெளியிடுவோம்.
ஏன் சஜித், அநுர இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வரவில்லை. எந்தவொரு உறுப்பினருக்கும் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வந்திருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். கடந்த அரசாங்க காலத்தில் இது நிகழ்ந்திருந்தாலும் இந்தச் சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.
சஜித், அநுர இவ்வாறு செய்வார்களா? நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் சில வருடங்கள் தேவைப்படுகின்றன. எங்களுக்கு உதவிகள் தேவை. ஐ.எம்.எப்., 17 நாடுகள், சீனா ஆகிய தரப்பினருடன் கதைத்து உதவிகளைப் பெற்றுள்ளேன். இந்த உடன்பாட்டிற்கு வந்துள்ளோம். இதனை மீறினால் நிதி கிடைக்காது. சஜித், அநுர இந்த உடன்படிக்கைகளில் மாற்றம் செய்வோம் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு செய்தால் டொலர் மீண்டும் 370 ரூபா வரை செல்லும். ஆற்றில் விழுந்து சாகச் சென்றவரை காப்பாற்றி மீண்டும் கரைக்குக் கொண்டு வந்த பின்னர் மீண்டும் ஆற்றில் குதிப்பதா? அவர்கள் அதனைத் தான் செய்வதாக சொல்கிறார்கள். நாம் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இங்குள்ளவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே. நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். அதனால் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். உங்களின் எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள். இதனை பாதுகாத்துக் கொள்ள கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருகிறேன். அல்லது கேஸ் சிலிண்டர் இன்றி வாழ நேரிடும்.'' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்:
''இந்த தேர்தல் தலைவர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல. இது சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகும். நடுவீதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். நாட்டில் அராஜக நிலை இருந்தது. இந்த சவாலை ஏற்குமாறு அனைத்து தலைவர்களிடமும் மக்கள் மன்றாடினர். பல மாத காலங்கள் உரம் தாருங்கள், பெற்றோல் தாருங்கள் என்று மக்கள் கோரினார்கள்.
இந்த சவாலை பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவரையும், அநுர குமாரவையும் அழைத்த போது ஓடி ஒளிந்தார்கள். அன்று சவால்களை ஏற்காதவர்கள் இன்று தங்களிடம் சிறந்த குழுவொன்று சொல்கிறார்கள். தங்களுக்கு ஆட்சியை வழங்குமாறு கோருகிறார்கள். தங்களுடன் புதிய குழுவொன்று இணைந்துள்ளதாக சொல்கிறார்கள். கோத்தபயவுடன் இருந்த நாளக்க கொடஹேவா, ஜீ.எல்.பீரிஸ், டளஸ் போன்றவர்கள் தான் அவர்கள் அவர்களுடன் இருக்கின்றனர்.
கடந்த இரு வருடங்களில் நாடு பாரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
இனவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. தேர்தல் வந்து விட்டால் முஸ்லிங்களை குறிவைத்து வருவார்கள். இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் நன்றியுள்ள சமூகமாக இருந்து செயற்பட வேண்டும். இனவாதமில்லாத மதவாதமில்லாத ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க தான். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தோல்வி நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பாரிய வீழ்ச்சியாகவே அமையும். எனவே புத்திசாதுர்யமாக மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment