மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாளை குளம் பறவைகள் சரணாலயத்தை அண்மித்ததாக விவேகானந்த பூங்கா திறந்து வைப்பு........................
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாளை குளம் பறவைகள் சரணாலயத்தை அண்மித்ததாக விவேகானந்த பூங்கா திறந்து வைப்பு........................
விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்குடன் க.சற்குனேஸ்வரன் அவர்கள் ஸ்தாபித்து வழிநடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை தலைமை தளமாக கொண்டு தமிழர் தாயக பகுதிகளில் பல சமூக சேவைகளை இரண்டு தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் சமூக நலன்புரி அமைப்பின் மற்றொரு மகத்தான செயற்பாடாக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்த பூங்கா இன்று காலை 9 மணிக்கு பல ஆன்மீக அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவர் க.சற்குணேஸ்வரன் அவர்களின் தலைமையேற்றலுடன் திறப்பு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. இத் திறப்பு விழாவில் மாவட்ட அரச சேவை பதவி நிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் மாணவர்கள் என பல நூறு மக்கள் கலந்து கொண்டனர்.
இப் பூங்கா மட்டக்களப்பு கல்முனை சாலை வழியோரமாக மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தொலைவில் கிரான்குளம் குருக்கள்மடம் கிராம எல்லைகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட குருக்கள்மடம் ஏத்தாளைகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகாமையில் இலவச வைத்திய சேவையினை வழங்கும் கிரான்குளம் சத்தியசாயி சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு முன்பாக இயற்கை எழில் சூழ்ந்த வனப்பு மிக்க பகுதியில் இவ் சிறுவர் பூங்கா பல தன்னார்வலர்களின் மில்லியன் கணக்கான நிதிப்பங்களிப்புடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ் விவேகானந்த பூங்கா சிறுவர்களுக்கான பொழுது போக்கு தளம் என்பதை தாண்டி ஆன்மீக உணர்வை தூண்டும் ஒரு விவேகானந்தரின் ஆலயம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மத்தியில் 30 அடி உயர பிரமாண்ட விவேகானந்த உருவச்சிலை பார்ப்பதற்கு பிரமிப்பை உண்டு பண்ணுகிறது. இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள விவேகாந்தரின் அமர்ந்த நிலையில் அமைந்த மிக உயரமான சிலை என்ற சிறப்பை இச் சிலை பெறுகிறது. அத்தோடு 7 அடி உயரமான நிற்கும் நிலையிலமைந்த சுவாமியியின் சிந்தனைகளை ஏற்று நடந்த துறவிகளின் திருவுருவச் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் ஈடுபடும் நோக்கில் விவேகானந்தரின் இல்லங்கள் பல அமைக்கப்பட்டு திரும்புமிடம் எங்கும் விவேகானந்தரின் திருவுருவங்களுடன் சுவாமிகளின் சிந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பூங்காவுக்கு அழகு சேர்க்கும் வகையில் பல வகை பூமரங்கள் நடப்பட்டுள்ளது. அங்கு கண் கவர் வர்ணங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களையும் பூமரங்களையும் பார்க்கும் போது மனதில் மன நிறைவை உண்டுபண்ணுகிறது.
இப் பூங்காவில் சிறுவர்கள் பொழுதை களிக்கும் நோக்குடன் பல நவீன விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு முற்றம் அமைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுச் செல்லப்படுவதுடன். சிற்றுண்டிச்சாலை என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓர் இடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
எமது பகுதியில் இப் பூங்கா அமையப்பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த ஒரு விடயமாகவே கருதுகிறேன் எந்த சூழ் நிலையில் சென்றாலும் மனதை ஒரு நிலைப்படுத்தக்கூடிய ஒரு இடமாகவும் சிறுவர்கள் பெரியோர் என அனைவரையும் கவரும் ஒரு பூங்காவாக எதிர்காலத்தில் திகழும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Comments
Post a Comment