மட்டக்களப்பு ஆசிரியர் 1970இல் தனக்கு கற்பித்தை புகழ்ந்து: மேடையில் அருகே அமரச் செய்த ஜனாதிபதி ரணில்............

 மட்டக்களப்பு ஆசிரியர் 1970இல் தனக்கு கற்பித்தை புகழ்ந்து: மேடையில் அருகே அமரச் செய்த ஜனாதிபதி ரணில்............

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி கற்ற போது 1970களில் கொழும்பு றோயல் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய ப.சிவலிங்கம் மட்டக்களப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையில் ஏறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆசி வழங்கினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏற்பாடு செய்திருந்த 'இயலும் ஸ்ரீலங்கா' பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.

ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த 98 வயதான பி.சிவலிங்கம் தனது மாணவர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு வருவதை அறிந்து இந்தப் பொதுக்கூட்டத்திக்கு வந்திருந்தார். இதன் போது தனது ஆசிரியரை அருகில் உட்கார வைத்த அவரது பழைய மாணவனான ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவரைப் புகழ்ந்தார்.

'எந்தவொரு அச்சமான சூழ்நிலையிலும் கஷ்டப்படும் மக்களை கைவிட்டு ஓடிப்போய் எமது நகரத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த மாட்டேன்' என்று எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் இளையோர் செய்து கொண்ட சத்தியபிரமாணத்தை ரோயல் கல்லூரியில் தான் கற்றுக்கொண்டதனால் 2022ஆம் ஆண்டு எவரும் ஏற்றுக்கொள்ள அஞ்சிய நாட்டைப் பொறுப்பேற்று பொருளாதாரத்தை முன்னேற்றும் சவாலை வெற்றிகொண்டிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில், தனது வெற்றியில் ஆசிரியர் சிவலிங்கத்துக்கும் பங்கிருப்பதாகத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமின்றி, பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு ஆசிரியர் சிவலிங்கம் கற்பித்திருப்பதாகவும், அவர் கற்றுக்கொடுத்தவை வீண் போகவில்லை என்பதை நேரில் காண்பதாகவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.


Comments