கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-05
கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மக்களுக்கு உண்மையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தான் அது இருந்தது. அப்போதைய மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்கள் பாதர் ஜோசப்மேரியை அவசரமாக அழைத்திருந்தார். பாதரும் அங்கே சென்று ஆயரை சந்திப்பதற்காக இருந்துள்ளார், ஏன் என்னை ஆயர் அழைத்தார் என்னவாக இருக்கும் என சிந்தித்தவாறு இருக்கும் போது ஆயர் அழைக்கின்றார், உள்ளே செல்கின்றார் பாதர்.
தனிப்பங்காக மாறிய இஞ்ஞாசியார் பங்கு:
ஆலய கட்டுமான பணிகள் பற்றி கலந்துரையாடி விட்டு, புனித இஞ்ஞாசியார் ஆலயத்தை ஒரு புதிய பங்காக பிரித்தெடுத்தால் என்ன என கேட்டுள்ளார் ஆயர் அவர்கள். பாதர் ஜோசப்மேரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்ன செய்வது என்றே தெரியவில்லை, ஓம் அதை செய்வோம் என ஆயரிடம் கூறிய போது மற்றுமொரு செய்தியை அவர் காதில் சொன்னார் ஆயர் அவர்கள், இதை தனி பங்காக அமைத்தால் நீர் தான் பங்குத்தந்தையாக பணியாற்ற வேண்டும் சம்மதமா? எனவும் கேட்டுள்ளார் இதற்கும் தலை ஆட்டி விட்டு பங்கிற்கு விரைவாக வருகின்றார்.
முதல் பங்குத்தந்தையாக ஜோசப்மேரி அடிகளார்:
புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் அப்போதிருந்த பங்குச்சபையை அழைத்து இம்மகிழ்சியான செய்தியை அறிவிக்கின்றார், 2000.01.17 அன்று புதிய ஒரு தனிப்பங்காக புனித இஞ்ஞாசியார் ஆலயம் தன் பயணத்தை தொடங்குகின்றது. புதிய பங்குத்தந்தையாகவும், இஞ்ஞாசியார் ஆலயத்தின் முதல் பங்குத்தந்தையாகவும், சரித்திரபதிவில் தன் பெயரை பதிவிட்டக் கொள்கின்றார் பாதர் ஜோசப்மேரி. இஞ்ஞாசியார் பாடசாலையாக இயங்கிய கட்டிடம் பாவனையற்று கிடந்த நேரம், அக்கட்டிடத்தை தன் வதிவிடமாக மாற்றிக் கொண்டார் பாதர் ஜோசப்மேரி. அடுத்த வருடம் 2025 புனித இஞ்ஞாசியார் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்டு 25 வருடங்கள் என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
சுனாமிதியின் கோரதாண்டவம்:
நாட்கள் நகரத்தொடங்கியது அப்போது தான் அந்த கோரத்தாண்டவத்தை கடல் ஆடியது, சுனாமி எனும் பெயர் கொண்டு உலகையே ஆட்டிப்போட்டது, இதில் பெரிதும் டச்பார், நாவலடி, கல்லடி, திருச்செந்தூர்,புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிளாக்கசன் அடிகளார் காலத்தில் கட்டப்பட்ட பாடசாலை மற்றும் புதிய ஆலயம் அப்படியேயே இருந்தது. பெரும் வாரியாக மக்களை காவு கொண்ட இச்சுனாமியால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது. இஞ்ஞாசியார் ஆலயத்தின் துனைப்பங்குகளாக இருந்த டச்பார் கடற்கரை அந்தோணியார் ஆலயம் பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் கடற்கரை அன்னை வேளாங்கண்ணி ஆலயம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு, அன்னையின் சுருவம் முழுமைகான பாதிக்கப்பட்டிருந்தது அதன் சுவடுகள் இப்போதும் கல்லடி கடற்கரையில் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதன் பின் இதற்கான பல முன்னெடுப்புக்கள் மேற் கொள்ளப்பட்டன.
கடற்கரை அன்னை வேளாங்கன்னிக்கு புதிய ஆலயம்:
இதன் ஒரு கட்டமாக ஆலய வளாகத்தில் குருக்கள் தங்குவதற்காகவும், பங்குச்சபை கூட்டங்கள் நடாத்துவதற்காகவும் பாதர் ஜோசப்மேரி அவர்களின் முயற்சியால் ஒரு வதிவிடம் இத்தாலிய திருச்சபையின் உதவியுடன் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன், கடற்கரை அன்னை வேளாங்கண்ணிக்கு ஒரு புதிய ஆலயம் சகவாழ்வு நிறுவனத்தின் உதவியுடன் 2007ஆம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் போது ஓர் துயரச் செய்தி அனைவரது காதிலும் ஒலிக்கின்றது அது என்ன என்று அடுத்த தொடரில் பார்ப்போம்......
Comments
Post a Comment