கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-04

 கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-04

இலங்கையின் முதலாவது இயேசுசபை துறவி அருட்தந்தை அலோசியஸ்மேரி:

அருட்தந்தை அலோசியஸ்மேரி (S.J)

இதில் ஒரு முக்கியமான விடயம் தற்போது தான் என் கைகளில் கிடைத்துள்ளது. இலங்கையின் முதலாவது இயேசுசபை துறவியான கதிர்வேல்பிள்ளை முத்தைய அலோசியஸ்மேரி அடிகளார் அவர்களால்  1925ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இஞ்ஞாசியார் பாடசாலையை உருவாக்கியதாக அறியப்படுகின்றது.  இவர் தான் இலங்கையின் முதலாவது இயேசுசபை துறவி என்பதுடன், திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாநிலத்தின் முதல் இயேசுசபை துறவி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதுவும் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் அக்காலத்தில் கல்லடியில் இருந்த சொந்த வீட்டை இஞ்ஞாசியார்  பாடசாலை அமைப்பதற்காக கொடுத்தாகவும், அவ்வீடானது தற்போது புதுமுகத்துவாரத்தில்  அமைந்துள்ள மின்சார சபையின்  டவர் இருக்கும் காணி ஆகும். இக்காணி மின்சார சபையின் டவர்  அடிப்பதற்கு முன்னர்  ஓடு போடப்பட்ட வீடாக  இருந்ததாகவும்,  அதுவே ஓட்டுப்பள்ளி வீடு என பலராலும் அழைக்கப்ட்டதாகவும் தற்போது  தகல்கள் கிடைக்கின்றன. 

அவ்வீடானது அருட்தந்தை அலோசியஸ்மேரியின் வீடு என்றும் கூறப்படுகின்றது. அப்பாடசாலைக்கு  தலைமை ஆசிரியராக அருட்தந்தை அன்னதாஸ் அவர்களின்  தாயாரின் தந்தையான  K.ஜோசப் (சூசைமுத்து மாஸ்டர்) அவர்கள் அங்கிருந்து கற்பித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் இஞ்ஞாசியார் ஆலயத்தில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகின்றது. தேடுதல் மிக முக்கியம் தேடுவதை பதிவிடுங்கள் யாராவது ஒருவருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

அருட்தந்தை அலோசியஸ்மேரி அவர்களை பற்றி நான்  150 கடக்கும் புனித மிக்கல் கல்லூரி எனும் தொடரில் முதலாம் பாகத்தில் அவரது புகைப்படத்துடன் அவரை பற்றி எழுதியுள்ளேன்.

இனித் தொடர்வோம் 1980ஆம் ஆண்டில் ஒரு புதிய பங்குத்தந்தை புளியடிக்குடா செபஸ்தியார் ஆலயத்திற்கு வருகின்றார்,  இவருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய கதையே உண்டு ஆனால் நீங்கள் நினைக்கும் குருவானவர் அல்ல, இவர் அருட்தந்தை அன்டனிப்பிள்ளை அடிகளார் இவருக்கு என்ன மிகப்பெரிய கதையுண்டு என்று கேட்கிறீர்களா ஆம் உண்டு.

மட்டக்களப்பு கடற்கரைக்கு வந்தா அன்னை வேளாங்கன்னி மாதா:

1983 - 1984ம் ஆண்டளவில் மட்டக்களப்பு கடற்கரையில் தம்பிப்பிள்ளை மீன்வாடி மிகவும் பிரபல்யமான ஒரு வாடியாக இருந்தது. இதன் உரிமையாளரான இந்து மதத்தை சேர்ந்த தம்பிள்ளை என்பவர் இக்கடற்கரையில் ஒரு அன்னை வேளாங்கன்னி சுருவத்தை வைப்பதற்கு பாதர் அன்டனிபிள்ளையிடம் கேட்டுள்ளார், அதற்கு அவர் சரி என பதிலளிக்க ஒரு சிறிய குடிசையில் வேளாங்கன்னி சுருவம் வைக்கபட்பட்டதாக கூறப்படுகின்றது. இது காலத்தால் அழிக்க முடியாத ஓர் சம்பவம் இதனால் தான் அன்டனிப்பிள்ளை பாதரை இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்தவராக திகழ்கின்றார். 

இஞ்ஞாசியாருக்கு புதிய ஆலயம்:

1990ம் ஆண்டளவில் புளியடிக்குடா செபஸ்தியார் ஆலயத்திற்கு பங்குத்தந்தையாக அருட்தந்தை யோசப்மேரி அடிகளார் வருகின்றார். இவரின் பராமரிப்பில் இஞ்ஞாசியார் ஆலயமும் இருந்து வருகின்றது. 1992ம் ஆண்டு டச்பார் கிராமத்தில் மக்களின் குடியேற்றம் அதிகரிதித்து காணப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த இஞ்ஞாசியார் ஆலயத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. அப்போது இவ்வாலயத்தில் கூடிய அக்கறை கொண்ட யோசப்மேரி அடிகளார், புதிதாக ஓர் ஆலயத்தை  நிர்மானிக்க அப்போதிருந்த ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளையிடம் அனுமதி கோருகின்றார், அவரும் அனுமதி அளிக்க புதிய வடிவிலான இஞ்ஞாசியார் ஆலயம் கட்டுமான பணிக்காக 15.01.1992 அன்று ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களால் அடிக்கல் நடப்பட்டு வேலைகள் தொடங்கப்படுகின்றன, அப்போதும் இவ்வாலயம் செபஸ்தியார் பங்கின் துணை  பங்காகத்தான் இருந்தது.

ஆலய பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 1993ல் ஆலய வளாகத்தில் இருந்த பாடசாலையை ஆலய வளாகத்தில் இருந்து மாற்றுவற்கான  பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான அனுமதியை பெற்று திருச்சபைக்கான ஒரு காணியில் புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்து, புதிய பாடசாலையாக 1994.06.06 அன்று மட்டக்களப்பு கல்வி திணைக்களத்திடம் கையளிக்கின்றார் யோசப்மேரி அடிகளார், இருந்த போதிலும் புதிய பாடசாலை வேறு இடத்திற்கு சென்றதால் பழைய பாடசாலை கட்டிடமானது திருச்சபை வசமாகி ஆலயத்திற்கு சொந்தமானது.

ஆலய கட்டுமான பணிகள் மும்முரமாக செற்பட்டுக் கொண்டிருக்கின்றது, ஒரு பிரம்மாண்டமான ஆலயமாக கட்டப்பட்டு வந்தது. பாதர் ஜோசப் மேரி அடிகளார் அடிக்கடி வந்து இப்பணிகளை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது தான் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கின்றது அது என்ன என்ன என நீங்கள் காத்திருங்கள் அடுத்த தொடரில் பார்ப்போம்....................

5ம் தொடர் தொடரும்........

Comments