பிள்ளைகளுக்கு மாத்திரமன்றி கொள்கைகளை வகுப்பவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச......

 பிள்ளைகளுக்கு மாத்திரமன்றி கொள்கைகளை வகுப்பவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச......

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 280 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை மட்டக்களப்பு, கல்குடா  வாழச்சேனை, அந்-நூர் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 03 ஆம் திகதி இடம்பெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்த கல்வியானது முழு நாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு சாதனமாகும். இது இனவாதம், மதவாதம் மற்றும் இன பேதம், மத பேதங்களை, இத்தகைய பாகுபாடுகளை துடைத்தெறிய வழிகோலுகிறது. கொள்கை வகுப்பாளர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிருந்தால், அவர்கள் ஆதார, சாட்சி, தரவு அடிப்படையிலான கொள்கைகளை வகுப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொரோனா கோவிட் காலத்தில், தகனமா அல்லது அடக்கமா என்ற விடயத்தில் பல கடுமையான பிரச்சினைகள் எழுந்தன. கொள்கை வகுப்பில் சாட்சி, விஞ்ஞான மற்றும் கல்வி அடிப்படைகள் தேவை.  முஸ்லிம் மக்கள் இழைக்கப்பட்ட இந்த அநீதியில் இவை எதுவும் கைகொள்ளப்படவில்லை. அறிவியல் ஆய்வுகள், தரவுகளை மையமாக வைத்து, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்கும் போது ஒரு நாடாக இது போன்ற பிரச்சினைகள் ஒருபோதும் எழாது போலவே, முகம் கொடுக்க வேண்டிய தேவையேற்படாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், வழமையாக ஊட்டச்சத்து குறைபாடு, தாய்வழி ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளது ஊட்டச்சத்து குறித்து பேசும்போதும் தீர்மானங்களுக்கு வரும்போதும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகியவற்றைக் கலந்தாலோசித்து, கேட்டுச் செய்த போதிலும், அடக்கமா, தகனமா விவகாரத்தில், இவ்வமைப்புகள் சொன்னதை காதில் வாங்காமல், தமது இனவாத மதவாத  கருத்துக்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஒரு இனத்தாரை குறிவைத்து  தாக்கினர். இது மனவேதையான விடயம். நாம் ஒரு நாடாக கல்வியை மேம்படுத்தி இருந்தால், அந்த மேம்பட்ட கல்வியில், அறிவியல் அடிப்படையிலான சான்றாதாரங்களின் அடிப்படையிலான, அறிவை மையமாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்கும் ஒரு அமைப்பு இருந்திருந்தால் இவ்வாறான ஒரு பிரச்சினை வராது. உலகில் வேறு எந்த நாட்டிலும் தகனமா அடக்கமா என்ற பிரச்சினை எழவில்லை, என்றிருந்தாலும் அது எமது நாட்டில் எழுந்தது. எனவே கொள்கைகளை வகுப்பவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 280 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, வாழச்சேனை, அந்-நூர் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 03 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன் போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக்  கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் புதல்வர் அம்ஜாட் மௌலான மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஒரு நாடாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். சவால்களுக்கு முகம்கொடுக்கும் போது, அந்த சவால்களை தயங்காமல் எதிர்கொள்ள வேண்டும். இந்த சவால்களில் இருந்து வெளியேற அறிவு சார்ந்த பொருளாதாரமே சிறந்த வழிமுறையாகும் என்றபடியால், இதனைக் கருத்திற் கொண்டு பாடசாலை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு வரை, உலகை வென்ற தொழில்நுட்பங்கள் எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. நாம் எமது நாட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது. 2023 இல் உலகை வென்ற விடயங்கள் எமது நாட்டின் கல்வித்திட்டத்தில் உள்ளதா என்பதற்கு பதில் இல்லை. எனவே ஸ்மார்ட்டை நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஸ்மார்ட் மாணவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்மார்ட் பாடசாலை தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அறிவு மற்றும் ஒற்றுமையால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

ஒற்றுமையினால் தான் இந்நாடு கட்டியெழுப்பப்பட முடியும். இன, மத அடிப்படையில் சகோதர சக மக்களைத் தாக்கி, சமூகத்தில் பல்வேறு மதங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் உரிய இடம் கொடுக்காவிட்டால், இங்கு ஒற்றுமையின்மை உருவாகும். போராட்டத்தின் போது அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்தனர். பௌத்தர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று பாராது பேதமின்றி ஒன்றிணைந்தனர். இந்த வகையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் கூட ஒன்றிணைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்த சந்தர்ப்பத்திலும், எந்த மதத்திலும் எந்த இனத்திலும் மதவாதம், இனவாதம் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாதமும் இனவாதமும் அதிக விஷத்தன்மை கொண்ட தேசிய புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அறிவு இருந்தால் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்தி அறியலாம்.

அறிவு இருக்குமாக இருந்தால், யாராவது பொய் சொன்னால், அது பொய்யென அந்த பொய்யை கண்டுபிடிக்க முடியும். உண்மையை வெளிப்படுத்துவதற்கும் பொய்யை சுட்டிக்காட்டுவதற்கும் கூட இந்த அறிவு முக்கியமானதாகும். கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் பொய் சொல்லி அரசாங்கம் தற்போது நடந்து வருகிறது. இருதரப்பு கடன் தாரர்களின் நாம் மீளச் செலுத்த வேண்டியுள்ள கடனை 2033 இல் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியமே கூறியிருந்தாலும், 2028 இல் இருந்து மீளச் செலுத்துவதற்கு நமது முட்டாள் ஆட்சியாளர்கள் தாமாகவே  இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளனர். இங்கு  நாட்டுக்கும் மக்களுக்கும்தான் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு சிறந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் இருந்தும் அது தவறவிடப்பட்டுள்ளது. கானா, ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளின் நிதி அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் தமது கடன் தாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெரும் கடன் நிவாரணம் பெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பிள்ளைகள் போலவே பெற்றோரும் விடயங்களை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து சமூகத்திற்கும் பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவூட்டுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். சமூகத்திலுள்ள மக்கள் பொருளாதாரம் குறித்து புரிதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும், சமூகமும் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு பெற்றிருப்போமேயானால் கொள்கை வகுப்பாளர்களால் பொய் சொல்ல முடியாது போகும். பொய், ஏமாற்று என்பது முடியாத காரியமாக போகும். எனவே அறிவு இங்கு மிக முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்த அறிவு மனித மூலதனத்தை உருவாக்குகிறது. நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க, அறிவாற்றலுடன் கூடிய பெரும் மனித மூலதனம் தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Comments