உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாகாணம் 5% க்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது - மட்டக்களப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ...

உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாகாணம் 5% க்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது - மட்டக்களப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ...

'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக்குறைவான மட்டத்திலயே அமைந்து காணப்படுகின்றது' என்று கூறியிருக்கின்றாா் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச.

தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தப்போதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளாா்.

'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42% பங்களிப்பை வழங்கி வருகிறது. மீதமுள்ள 58% பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5% க்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தாா்.

அவர் மேலும் பேசுகையில், 'உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அன்று தொடக்கம் இன்று வரையுள்ள எந்தத் தலைவராலும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம்' என்று உறுதியளித்தாா்.

'வடக்கு கிழக்கு மாணாணங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போரினால் இடம் பெயர்ந்த கணவனற்ற குடும்பங்கள் மற்றும் போர்வீரர்கள் என சமூகத்தில் பல மட்டத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை' என்றும் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

'வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கிராமங்களிலும் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவேன்' என்றும் சஜித் பிரேமதாச தனது உரையில் தெரிவித்தாா்.








 

Comments