கதிர்காமத்திற்கான காட்டுப் பாதை நாளை (12) வெள்ளிக்கிழமை மூடப்படும்..............
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை மேலும் ஒருநாள் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (12) வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.
களுதாவளை கதிர்காம பாதயாத்திரை ஒன்றியம் ஒரு நாள் பாதைத்திறப்பை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோரின் பரிசீலனைக்கு பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் இவ் வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது.
இம்முறை இது வரை இப்பாதையால் 34 ஆயிரம் பக்தர்கள் பயணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 30) முதல் நாளில் சுமார் 7000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்.
அதேபோல உகந்தை முருகனாலய கொடியேற்றம் இடம் பெற்ற கடந்த ஆறாம் தேதி கானகத்தில் பிரவேசித்த அடியார்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இதுவும் ஒரு வரலாற்று பதிவாகும்.
கதிர்காமத்திற்கான கானகப் பாதை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டு கடந்த 12 தினங்கள் அடியார்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
Comments
Post a Comment