100 வருடங்களுக்கு மேற்பட்ட கழகங்களுக்கு விரும்பும் வரை மைதான உரிமை வழங்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

 100 வருடங்களுக்கு மேற்பட்ட கழகங்களுக்கு விரும்பும் வரை மைதான உரிமை வழங்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

நூறு வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் விளையாட்டுக் கழகங்களுக்கு கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான மைதானங்களை விரும்பும் வரை உரிமை கொண்டாட அல்லது குறைந்தபட்சம் 99 வருட  குத்தகைக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை, காணி, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கையில் பிரபல றக்பி கழகங்களில் ஒன்றான சிலோனிஸ் றக்பி அண்ட் புட்போல் க்ளப் மைதானத்தில் புதிதாக பேரொளி மின்விளக்கு கோபுர கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய பேசியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விளையாட்டுக் கழகங்களுக்கு விரும்பும் வரை உரிமை அல்லது குறைந்தபட்சம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பும் வரை மைதான உரிமை பெறவுள்ள கழகங்கள் பட்டியலில சீ.ஆர்.அண்ட் எவ்.சி.யும் இணைக்கப்படும் எனவும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் றக்பி வீரரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

'எனக்கு பத்து வயதாக இருந்த போது இந்த மைதானத்தில் நான் ஓடி ஆடி விளையாடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. இப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இந்த மைதானத்திற்கான பேரொளி மின் விளக்கு கோபுரங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கக் கிடைத்ததை பாக்கியமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். அத்துடன் றக்பியின் இல்லமான சீ.ஆர்.கழகத்திற்கு பேரொளி மின்விளக்குகள் கிடைக்கவேண்டும் என்ற எனது நீண்ட கால கனவு இன்று நிறைவேறுவதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

'கடும் வெப்பம், வித்தியாசமான காலநிலையைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் மாலை வேளைகளில் றக்பி போட்டிகள் விளையாடப்படுவதே பொருத்தமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீண்டகால வரலாற்றைக் கொண்ட பல கழகங்களுக்கு சொந்தமான மைதானங்களில் மாலை வேளையில் றக்பி விளையாட முடியாமல் உள்ளது. இந் நிலையில் முதற்கட்டமாக சீ.ஆர்.மைதானத்தில் பேரொளி மின்கம்பங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்தோம். இதே வசதிகள் இன்னும் நான்கு அல்லது ஐந்து கழகங்களுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன் மூலம் கழகங்களுக்கு மட்டுமல்லாமல் பாசடாலைகளுக்கும் மாலை வேளைகளில் மின்னொளியில் றக்பி விளையாடக்கூடியதாக இருக்கும். அதன் மூலம் ரசிகர்களின் பங்கேற்பும் அதிகரிக்கும்' என்றார்.

'சி.ஆர்.கழகத்தின் தலைவராக சிரியான் குறே செயற்பட்டபோது அவர் தலைமையிலான குழுவினர் 2018இல் என்னை சந்தித்து சீ.ஆர்.கழகத்திற்கு பேரொளி மின் கோபுரங்களை அமைப்பதற்கு உதவுமாறு கோரி மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நான், அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தேன். ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் நான் விளையாட்டுத்துறை அமைச்சரானதும் அன்று கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளேன்' எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீ.ஆர்.கழகம் சார்பாக அமைச்சருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய கழகத் தலைவரும் முன்னாள் வீரருமான டிக்கிரி எல்லேபொல, 'அமைச்சரின் இந்த முயற்சியைப் பாராட்டுவதுடன் அவருக்கு நன்றி கூற கடைமைப்பட்டுள்ளேன். மாலை வேளைகளில் பேரொளியில் றக்பி விளையாடப்படும்போது வீரர்களின் ஆற்றல்கள் அதிகரிக்கும். அத்துடன் ரசிகர்களும் பெருமளவில் பங்குபற்றுவர். இதன் காரணமாக போட்டிகளில் சுவாரஸ்யம் அதிகரிப்பதுடன் கொண்டாட்ட விழா போன்ற சூழ்நிலையும் உருவாகும்' என்றார்.

இந்தத் திட்டத்திற்கு விளையாட்டுத்துறை நிதியத்திலிருந்து முதற்கட்ட கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபா சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, சீ.ஆர்.கழகத்தில் பேரொளி மின்கம்பங்கள் பொருத்துவற்கு அனுசரணை வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சு, எமிரேட்ஸ் விமான சேவை, வர்த்தக றக்பி சங்கம், அக்செஸ் குறூப் ஆகியவற்றுக்கும் சீ.ஆர். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்களுக்கும் டிக்கிரி எல்லேபொல தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான எமிரேட்ஸ் கன்ட்றி முகாமையாளர் வாஷெத் அல் ஆர்தா, அக்செஸ் குறூப் அதிபர் சுமல் பெரேரா, சீ.ஆர்.கழக உறுப்பினர்கள் உட்பட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.




Comments