கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-02 புதிய பாடசாலைகளாக்சன் அடிகளாரால் கட்டப்பட்டது:
கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-02
புதிய பாடசாலை கிளாக்சன் அடிகளாரால் கட்டப்பட்டது:
1955ல் மிகப்பெரிய விடயம் ஒன்று புனித இஞ்ஞாசியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது, அங்கு வாழும் கத்தோலிக்க, இந்து மக்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, திருச்சபையின் உதவியுடன், அருட்தந்தை கிளாக்சன் அடிகளார் ஒரு பாடசாலையை கட்டியெழுப்புகின்றார். இதில் கற்பிப்பதற்காக ஆசிரியர்களையும் நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றார்.
புதிய கட்டிடம் கலிபொட்:
இப்படியாக நாட்கள் நகரத் தெடங்கியது, அப்போது மிகவும் அமைதியான இடமாக இஞ்ஞாசியார் ஆலயம் இருந்தது. எனவே இவ் அமைதியான இடத்தில் ஒரு தியான இடம் ஒன்றை கட்டலாம் என திருச்சபை சிந்தித்தது, இதை ஓர் நீர் ஓடும் இடத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணியது. இஞ்ஞாசியார் ஆலயம் அருகில் இருக்கும் ஆற்றங்கரையில் ஓர் கட்டிடம் கட்டப்பட்டது, அதற்கு "கலிபொட்" எனும் பெயர் வைத்து அதை பராமரிப்பதற்கு வேலையாட்களை நியமித்து மிகவும் ரம்மியமான ஒரு சூழலை ஏற்படுத்தி கட்டப்பட்டது. அக்காலத்தில் பிரம்மிக்கதக்க ஓரு கட்டிடமாக "கலிபொட்" கட்டிடம் இருந்தது என்றால் அது மிகையாகாது.
இவ்கலிபொட் கட்டிடத்திற்கு குருக்கள் சென்று ஆறுதலாக இருக்கவும், இளைப்பாறுவதற்கும் மற்றும் தியானம் செய்வதற்குமான ஓர் அமையான இடமாக இருந்தது. அத்துடன் சிறிய குருமடத்தில் படித்துக் கொண்டிருந்த சிறிய குருமட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மட்டக்களப்பு நகரத்தில் இருந்து வருகை தந்து நாள் முழுவதும் செலவிட்டு செல்வார்கள். அவர்கள், பெரும்பாலும் அக்கரையில் இருந்து வள்ளங்கள் மூலமே வந்து சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அக்காலத்தில் சிறு குருமடத்தில் இருந்த மாணவர்கள் தான் இன்றும் எம்முடன் இருக்கும் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் முதல் பங்குத்தந்தையான அருட்தந்தை யோசப்மேரி அடிகளார் அவர்களும், தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் அருட்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இன்றும் சாட்சி பகிர்வர்.
1957 வெள்ளப்பெருக்கு இஞ்ஞாசியாருக்கு மற்றுமொரு சவால்:
இப்படியாக இருக்கும் போது ஓர் பாரிய அழிவோன்று மட்டக்களப்பை ஆட்கொண்டது, 1957ம் ஆண்டு பெரு வெள்ளம் மட்டக்களப்பை காவு கொண்டது, அது இவ்வாலயத்தையும், பாடசாலையையும் மற்றும் கலிபொட் கட்டிடத்தையும் விட்டு வைக்கவில்லை, ஆற்றை அன்டியதாக இம்மூன்று இடங்களும் காணப்பட்டதால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டது. இருந்த போதிலும் வெள்ளம் வழிந்தோட அனைத்து பணிகளும் குருக்கள், சிறுமட மாணவர்கள், பொது மக்கள் உதவியுடன் சீர் செய்யப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்றது புனித இஞ்ஞாசியார் ஆலயத்தை சூழ்ந்த இடங்கள்.
இக்கால கட்டத்தில் பெருவாரியான மக்கள் புதிது புதிதாக டச்பார் பகுதிகளில் குடியேறத் தொடங்கினார்கள். அப்போது தான் அரசாங்கம் ஓர் அறித்தலை விடுத்திருந்தது அது என்ன என்று அடுத்த தொடரில் பார்ப்போம்.
பாகம் மூன்று தொடரும்......
Comments
Post a Comment