கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-01

 கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலயம் ஓர் வரலாற்று பார்வை: பகுதி-01

கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயம் 17.01.2000ம் ஆண்டு அன்று புளியடிக்குடா புனித செபஸ்தியார் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு தனிப்பங்காக அப்போதைய மட்டக்களப்பு திருகோணமலை மறை மாநில ஆயரான ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது. 

இவ் இஞ்ஞாசியார் ஆலயத்தின் கடந்தகால வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் மிகவும் சுவாரஸ்சியமான தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இதைப்பற்றி சற்று ஆழமாக பார்ப்போம்..

இஞ்ஞாசியார் ஆலயம் அக்காலத்தில்  புளியடிக்குடா பங்குடனும், தாளங்குடா பங்குடனும்  தொடர்பு கொண்டாகதாகவே காணப்பட்டது. அக்காலத்தில் தாளங்குடா பங்கு என்றால் கல்லடிப்பாலம் தொடக்கம் மாங்காடு கத்தோலிக்க பாடசாலை வரை உள்ள நிலப்பரலப்பை கொண்டு அம்பிளாந்துறை, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை ஆகிய வாவிக்கு மறுப்பமுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாரிய பங்காக விளங்கியது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்குமல்லவா? இப்பெரிய பங்குகளை அந்தக்காலத்தில் இருந்த குருக்கள் பல சிரமத்தின் மத்தியில் பராமரித்து வந்தனர்.

முதலில் இந்த விடயத்தை நான் உங்களுக்கு கூற விரும்புகின்றேன், கல்லடி பாலம் 1924ம் ஆண்டில் தான் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது மறு கரையில் இருந்து வள்ளங்கள் மூலமாக தான் மக்கள் தற்போதைய கல்லடி பகுதிக்கு வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இதை ஏன் கூறினேன் என நீங்கள் இப்போது யோசிப்பீர்கள்  வாங்க பாப்பம்.

பாதர் லாசரஸ், பாதர் ஹொப்பேனோயின் வருகை:

புனித இஞ்ஞாசியார் ஆலயம் 1916ம் ஆண்டளவில் அருட்தந்தை செபஸ்தியான் லாசரஸ் அவர்களால் ஒரு சிறு ஓலை குடிலாக கட்டப்பட்டு அதில் ஓர் இஞ்ஞாசியாரின் சிறிய சுருவம் வைக்கட்டதாக கூறப்படுகின்றது. காலப்போக்கில்  1917ம் ஆண்டு புளிடிக்குடா புனித செபஸ்தியார் பங்கில் ஒரு ஓலைகுடிசையில் பணியாற்றி வந்த இயேசுசபை துறவியான அருட்தந்தை ஹொப்பேனோ அடிகளார் இஞ்ஞாசியார் ஆலயத்தையும் பராமரிக்க தொடங்கினார். இவர் இவ்வாலயத்தை ஒரு தென்னந்தோப்பாக மாற்றுவதற்காக இங்குள்ள மக்களுக்கு கூலி கொடுத்து தென்னங்கன்றுகளை நட்டு பராரித்து வந்துள்ளார். இப்படியாக நாட்கள் நகர அருட்தந்தை ஹொப்பேனோ அடிகளார் புளியடிக்குடாவை விட்டு தளங்குடா பங்கில்  குடியேறினார் இருந்த போதிலும்  புனித இஞ்ஞாசியார் ஆலயமும் அவருடைய கண்கானிப்பிலேயே இருந்து வந்தது.
அப்போதைய காலத்தில்  கல்லடிப்பாலம் கட்டப்பட்டு 1924 திறக்கப்படுகின்றது. அப்போது இவ்வாலயத்திற்கு வருவதற்கு குருக்கள் வள்ளத்தையே பாவித்து இருந்தனர் இதை தான் நான் மேலே குறிப்பிடடிருந்தேன்.
இதன் பின்னர் இயேசு சபை  துறவியான அருட்தந்தை பிலிக்ஸ் கிளாக்சன் அடிகளார் புளிடிக்குடா பங்குதந்தையாக இணைந்து கொண்டார், இதனால் இஞ்ஞாசியார் ஆலயமும் அவருடைய பராமரிப்பின் கீழ் வந்தது, ஏன் என்றால் புளியடிக்குடாவிற்கு  அன்மித்தாக இஞ்ஞாசியார் ஆலயம் இருந்தும் ஒரு காரணமாகும். அப்போது தான் ஒரு அதிசயம் நிகழ்தது அருட்தந்தை கிளாக்சன் அடிகளார் ஓலை குடிலாக காணப்பட்ட இஞ்ஞாசியார் ஆலயத்தை கல்லினால் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட முயற்சியை எடுக்கின்றார்.

இஞ்ஞாசியாருக்கு கல்லால் ஓர் ஆலயம்: 

1952ம் ஆண்டு ஓலைக்குடிலாய் இருந்த இஞ்ஞாசியார் ஆலயம் கல்லினால் கட்டப்பட்டு ஓடுகள் போடப்பட்டு புதுப்பொழிவுடன் காணப்பட்டது. இதற்காக பிலிக்ஸ் கிளாக்சன் மிகவும் சிரமப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது. போக்குவரத்துக்கான பாதை வசதிகள் இல்லாத காலத்தில் இவ்வாலயத்திற்கான பொருட்களை கொண்டு சேர்பதில் பல சவால்களை எதிர்நோக்கியும் இருந்தார்.

ஆலயத்தை கட்டி முடித்து விட்டோம், அங்குள்ள மக்களுக்கு திருப்பலி வைக்க வேண்டும், ஆலயத்தை சுற்றி இருக்கம் மக்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பிலிக்ஸ் கிளாக்சன் அடிகளாருக்கு இருந்தபடியே காணப்பட்டது.   இஞ்ஞாசியார் ஆலயயத்திற்கு செல்வதானால்  வீதிப்போக்குவரத்து பிரதான வீதிகள் மாத்திரமே காணப்பட்டது, சிறு வீதிகள் இல்லை எனவே பிலிக்ஸ் கிளாக்சன் அடிகளார் தற்போதைய திரேசா பாடசாலை கரையில் இருந்து தோணியில் இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு திருப்பலி ஒப்புக் கொடுக்க வந்து சென்றுள்ளார். இவருடன்  பிரான்சிஸ்கர் சகோதரிகளும் அவ்வாறே வந்து பல பணிகளை செய்துள்ளனர்.

இப்படியாக நாட்கள் நகர இவ்வாண்டில் மற்றுமொரு மாற்றம் நிகழ்கின்றது 25.10.1952ல் இப்போதிருந்த ஆயர் இக்னேசியஸ் கிளனி ஆண்டகை அவர்கள் பங்குகளின் எல்லைகளை நிர்மானித்து, புதிய பங்குககளை உருவாக்கினார். பங்குகள் எல்லாம் பாரிய பங்குகளாக இருக்கின்றன பராமரிப்பதால் குருக்களுக்கு பாரிய பிரச்சனை எழுந்துள்ளதை உணர்ந்து  பங்குகளை பிரிக்கின்றார். இதன் போது   புதிதாக கட்டப்பட்ட இஞ்ஞாசியார் ஆலயம் புளியடிக்குடாவின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது. 

இக்கால கட்டங்களில் கல்லடி-டச்சபார் பகுதிக்கென்று பாதைகள் ஒன்றும் கிடையாது அனைவரும் நடந்து தான் செல்ல வேண்டும், காட்டு பிரதேசமாக காணப்பட்ட அவ்விடங்களில் ஈச்சம் பற்றைகளும், நாவல் மரங்களும் நிறைந்து இருந்தது மக்கள் தனியே செல்வதங்கு பயப்பட்ட காலமாகவே இருந்தது.  .மக்கள் அங்கும் இங்கும் என்று வாழ்ந்து வந்தனர் ஆனால் மக்கள் ஆலயத்தை அன்டியதாக  சற்று செரிவாக சில கத்தோலிக்க மக்களுமே வாழ்ந்து வந்தனர்.

1955ல் மற்றுமொரு மாற்றம் நடைபெறுகின்றது அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.............

பாகம் இரண்டு தொடரும்.....



Comments