பாலர்சேனை கிராமத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினையை தீர்வு................
மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தின் மிக நீண்ட கால பிரச்சனையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை பிரபல தொழிலதிபரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா பெற்றுக்கொடுத்துள்ளார்.
இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையினை கேட்டறிந்து கொண்ட தொழிலதிபர் தேசபந்து செல்வராசா இவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்த்து வைக்கும் முகமாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கொங்கிறீட் குழாய் கிணறுகள் என்பவற்றை அமைத்து கொடுத்து நீண்டகால குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவின் வேப்பவெட்டுவான் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பாலர்சேனை கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இங்கு குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக பாரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ள நிலையில், இங்கு 90 வீதமான மக்கள் கூலித் தொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை ஈட்டிவருகிற நிலையிலேயே குடிநீர் பிரச்சனையினையும் நீண்ட காலமாக எதிர்நோக்கிவருகின்றனர்.
குறித்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீரை பெற்று வந்திருந்த போதிலும் அவை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பழுதடைந்து பாவனைக்கு உதவாமல் காணப்பட்டு வரும் நிலையில் அவற்றை திருத்தி அமைத்து அவற்றை பயன்படுத்துவதற்கான பணிகளை தேசபந்து செல்வராசா மேற்கொண்டுள்ளார்.
இக்கிராமத்தில் 06 குழாய் கிணறுகளும், கல்லால் கட்டப்பட்ட சில பொது கிணறுகளும் காணப்பட்ட நிலையில் பொது கிணறுகள் அனைத்தும் கோடை காலத்தில் வற்றி விடும் நிலையில், குழாய்கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும் அவை பழுதடைந்துள்ளதால், தண்ணீரை பெற்று கொள்ள முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வந்த நிலையில் வரட்சிக் காலமும் ஆரம்பமாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் தூர இடங்களுக்கு சென்று வெகு சிரமத்தின் மத்தியில் தண்ணீரை பெற வேண்டியுள்ளது.
இக்குழாய் கிணறுகளை திருத்தி தருமாறு பலரிடம் அப்பகுதி பொது மக்களால் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் எவரும் முன்வந்து உதவி செய்யாதவிடத்து, குறித்த கிராமத்திற்கு சென்ற மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும், ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளருமான தேசபந்து செல்வராசா இவர்களது பிரச்சனைக்கான தீர்வினை உடனடியாக பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த கிராமத்திற்கு நேரடியாக சென்று மக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட தேசபந்து செல்வராசா உடனடியாக பழுதடைந்த மூன்று குழாய் கிணறுகளையும் திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்தோடு கொங்கிறீட் குழாய்களை பொருத்தி நிரந்தரமான சில கிணறுகளையும் அமைத்து கொடுப்பதற்குமான உரிய நடவடிக்கைகளையும் இவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்தோடு பால்சேனை கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை படிப்படியாக தீர்த்து வைக்க தான் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வை பெற்றுத் தருவதாகவும் தேசபந்து செல்வராசா இதன் போது தெரிவித்துள்ளார்.
தேசபந்து செல்வராசா அவர்களின் மனிதநேய செயற்பாட்டினை பாராட்டிய இக் கிராம மக்கள் அவருக்கும் அவருடன் இணைந்து செயற்பட்டுவரும் சமூக செயற்பாட்டாளரான ஆர்.வசந்தராசா அவர்களுக்கும் தமது நன்றிகளையும் வாழ்க்குக்களையும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்றுள்ள தேசபந்து செல்வராசா நலிவுற்ற பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment