மாணவர்கள் கிரிக்கெட் துறையில் தேசிய மட்டத்தில் மிளிர வசதிகள் மேம்பட வேண்டும்: அதிபர் எஸ்.கே.பிகிராடோ............

 மாணவர்கள் கிரிக்கெட் துறையில் தேசிய மட்டத்தில் மிளிர வசதிகள் மேம்பட வேண்டும்: அதிபர் எஸ்.கே.பிகிராடோ............

மன்னார் பேசாலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாரிய செலவு கொண்ட கிரிக்கெட் விளையாட்டுத் துறைக்கு வசதிகள் அற்ற நிலை காணப்படுகின்ற போதும், வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக இப்பாடசாலையிலிருந்து  ஒரு மாணவி தேசிய மட்டத்தில் துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது பெருமையே. இங்கு பயிற்சி பெறுவதற்கான வசதிகள் இப்பாடசாலையில் மேம்படுத்தப்பட வேண்டும் என  மன்னார் பேசாலை மத்திய மகா வித்தியாலய அதிபர் எஸ்.கே.பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இது எங்கள் பாடசாலைக்கு பெருமையை தந்துள்ளது. இதற்காக எங்கள் பாடசாலை சமூகம் நன்றி கூறுகின்றது. இவரின் இந்த முயற்சி மேலும் உயரும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். எங்கள் பாடசாலை கிரிக்கெட் துடுப்பாட்டத்துக்கான வசதிகள் அற்ற நிலையியே காணப்படுகின்றது. இருந்தும் இந்த மாணவி இங்கு இருக்கின்ற வளத்தைக் கொண்டு சிறப்பான முறையில் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

உண்மையில் இவரை பயிற்றுவிப்பவர்கள் சிறப்பான முறையில் செயற்பட்டுள்ளனர் என்பது வெளிச்சமாகக் காணப்படுகின்றது. இந்த பாடசாலையில் கிரிக்கெட் பயிலுவதற்கான  வசதிகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கான வசதிகள் அற்ற நிலை காணப்படுகின்ற போதும் நாங்கள் இந்த மாணவியின் முயற்சிக்கு எங்களான உதவிகளை செய்து கொண்டு வருகின்றோம்.

கிரிக்கெட் விளையாட்டுத் துறையானது பாரிய நிதி தேவைப்படும் ஒரு துறையாக இருக்கின்றது. இதனால் இதற்கான அனைத்துக்கும் ஈடு செய்ய முடியாத நிலையாகவே இருக்கின்றது. இந்த வீராங்கனையான சயிந்தினி ஒரு பெண் பிள்ளையாக இருக்கின்ற போதும் அவர் துணிந்து தனது முயற்சிகளை முன்னெடுப்பது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

ஒரு வீரர் தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்படுவது மிக மிக கடினம். ஆனால் இந்த மாணவி வீட்டிலுள்ள கஷ்டத்தின் மத்தியிலும் பாடசாலையில் தனது விளையாட்டுத் துறைக்கான வசதிகள் அற்ற நிலையிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளமை பாராட்டப்பட வேண்டியது ஒன்றாகும்.

இந்த மாணவி தனது பாடவிதானத்தையும், விளையாட்டையும் கவனித்துக் கொண்டு இரண்டிலும்  முன்னேறி வருகின்றார். இவருடைய பெற்றோரும் மிகவும் வறுமை நிலையில் காணப்படுகின்ற போதும் இவர்கள் இந்த பிள்ளைக்கு தங்களான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த பாடசாலையில் மேலும் இவரைப்போல் கல்வியிலும், விளையாட்டிலும் ஈடுபட பலர் மிக ஆவலாக இருப்பதும் எமக்கு வெளிச்சமாக இருக்கின்றது என இப்பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ  தெரிவித்தார்.

Comments