மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வருக்கு மற்றுமொரு பதவி உயர்வு.......

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வருக்கு மற்றுமொரு பதவி உயர்வு.......

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடையாற்றிக் கொண்டிருக்கும் வேலுப்பிள்ளை ஈஸ்வரன் அவர்களுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எனும் உயர் பதவி வழங்கியுள்ளது.
இவர் மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு எனும் பிறப்பிடமாக கொண்டவர், விளையாட்டு படிப்பை கெடுத்துவிடும், விளையாட்டு சோறு போடுமா? என்ற புனைவுகளைப் பொய்யாக்கி விளையாட்டினூடாகச் சாதிக்கலாம் என்பதற்கான உதாரணர்களுள் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
தனது இளமைக் காலத்தில் முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரனாக, உள்ளூர் செவணசைட் கால்பந்துப் போட்டிகளில் பிரகாசித்த இவர், தனது கால்பந்தாட்டத் திறன் காரணமாக மட்டக்களப்பின் பாடுமீன் பொழுதுபோக்குக் கழகத்தின் முன்னிலை வீரனாக இணைத்துக் கொள்ளப்பட்டார்.
அப்போது பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் கால்பந்தாட்ட A அணியின் முதல் பதினொரு வீரர்களில் ஒருவராக வருவதென்பது இலேசான காரியமல்ல மிகுந்த திறனுடைய வீரர்களுக்கே அப்போது வாய்ப்புகள் கிடைத்தன. அதில் மிக இலகுவாக இடம்பிடித்திருந்தார்.
அக்காலத்தில் இலங்கையின் முன்னணிக் கால்பந்தாட்டக் கழகங்களை பாடுமீன் கால்பந்தாட்ட அணி எதிர்கொண்டு சவால்களை வழங்கிய போது அவ்வணியில் களமாடியிருந்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் விவசாய விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் கற்று அவர்கள் 1990களின் பின்னர் பிரதேச செயலகங்களின் கீழ் நிருவாகப் பரவலாக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து கொண்டார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களிலும் இளந்தலைமுறையினரின் விளையாட்டை விருத்தி செய்யும் சேவையில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு காரியமாற்றினார்.
இவருடைய சேவையின் சாட்சியங்களாகப் பல விளையாட்டு வீரர்கள் நமது மாவட்டத்தில் செயலாற்றி வருகிறார்கள்.
விளையாட்டு உத்தியோகத்தராக சேவையாற்றிய காலத்தில் விளையாட்டுடன் இணைந்த கற்கைகள் பலவற்றிலும் பங்குபற்றித் தனது தொழில் வாண்மையை மேலும் வலுப்படுத்தினார். இத்தோடு பட்டப்படிப்பையும் மேற்கொண்டு பட்டதாரியாகினார்.
மட்டக்களப்பின் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் ஆரம்பிப்பாளராகவும், ஆலோசகராகவும், நிருவாக உறுப்பினராகவும் பல்வேறு வகைகளில் பணியாற்றி மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டுக்களும் அபிவிருத்தி பெற தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியவர்.
தனது சேவைக் காலத்தில் மாவட்ட விளையாட்டுப் பயிற்றுனராக, மாவட்ட விளையாட்டு அதிகாரியாக பதவி உயர்வுகளைப் பெற்ற இவர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றியவர்.
இவர் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராகச் செயலாற்றிய போது அம்மாவட்டங்கள் தேசிய விளையாட்டு விழாவில் வெளிக்காட்டிய அடைவுகள் இவருடைய சிறப்பான பணியை எடுத்துக் காட்டும் தரவுகளாக உள்ளன.
வேலுப்பிள்ளை ஈஸ்பரன் அவர்கள் தான் சேவையாற்றிய இடங்களிலும் காலங்களிலும் வீரர்களின் சாதனைகளைப் பதிவாக்கம் செய்யும் காரியங்களில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றியுள்ளார். இதற்கு 'வெற்றி' எனும் சிறப்பு இதழ்களும் 'திடல்' எனும் செய்திமடலும் சான்றுகளாக உள்ளன
இத்தோடு விளையாட்டில் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு மாண்பு செய்யும் வேலைகளையும் முக்கியமாகச் செய்து வருபவர்.
நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் "கால்பந்தாட்ட விதிமுறைகள்" எனும் நூலைத் தமிழில் எழுதி நமக்குத் தந்துள்ளார். ஆளுமைமிக்க நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர். நல்ல பேச்சாளர். மட்டக்களப்பின் முக்கியமான நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளராகச் செயலாற்றி வருபவர்.
தானுண்டு தன்பாடுண்டு என்று வரையறுத்து வாழாமல் விளையாட்டுத் துறையில் பிரதானமாகவும் ஏனைய சமூகப் பணிகளில் விசேடமாகவும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றி வருபவர்.
எல்லோரையும் அரவணைத்தவாறு அமைதியாகவும், மிக எளிமையாகவும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றி வரும் ஓர் ஆளுமையாக, சிறந்த அரச சேவகனாக திரு வே.ஈஸ்பரன் தனது இதுவரையான சேவைக் காலத்தில் தன்னை இனங்காட்டியுள்ளார்.

Comments