மட்டக்களப்பு உலகநாச்சிபுரம் மண்முனைப் பிள்ளையார் ஆலயத் தேரோட்டம்............
மட்டக்களப்பு வாவியின் அருகாமையில் ஆற்று மணலில், ஆல விருட்ச நிழலில் கோவில் கொண்டு அடியார்களுக்கு அருள்பாலிக்கும் பிள்ளையார் வரலாற்று ரீதியாக மிகவும் பழைமைவாய்ந்த புகழினைக் கொண்டுள்ளார்.
பண்டைய சிறப்புப் பெற்ற இத்தலம் கி.பி 3ம், 4ம் நூற்றாண்டளவில் கொக்கட்டிச்சோலையையும் உள்ளடக்கிய மண்முனை இராச்சியத்துடன் தொடர்புடையது. மேகவர்ணன் (கி.பி 301 – 382) ஆட்சியின் போது ஒரிசா தேசத்து குகசேனனுடைய மகள் உலகநாச்சி கௌதமபுத்தரின் தசனத்தையும், கைலயங்கிரியில் குக வம்சத்தினர் வைத்திருந்த சிவலிங்கத்தையும் கொண்டு வந்து மேகவர்ணனிடம் தசனத்தை மாத்திரம் கொடுத்தாள். அப்போது மட்டக்களப்பு மன்னன் குணசிங்கன் என மட்டக்களப்பு மான்மியம் கூறும் மேகவர்ணன் மண்முனை காட்டு பிரதேசத்தை இவளுக்கு பரிசாக கொடுத்தான்.
திகடன் எனும் வேடன் காடு திருத்தும் போது கொக்கட்டி மரத்தை வெட்ட உதிரம் (இரத்தம்) பாய்ந்தது. இதை திகடன் உலகநாச்சியிடம் சொல்ல அவள் வந்து பார்த்து லிங்கம் இருப்பதைக் கண்டு கோயில் அமைத்து வட நாட்டில் இருந்து பட்டர் மூவரை அழைத்து பூசை செய்யும்படி கட்டளை இட்டாள். இவளது வழியில் வந்தவர்கள் உலகநாச்சி குடி (உலகிப்போடி குடி) எனவும் இவளால் குடியேற்றப்பட்ட படையினர் படையாட்சி குடி எனவும் கலிங்கத்தில் இருந்து இவளுடன் வந்தவர்கள் கலிங்ககுடி எனவும் அழைக்கப்பட்டனர். உலகநாச்சி என்னும் மண்முனை அரசி பல நிர்வாக கட்டமைப்புக்களை வகுத்து கோயில் பணியினை சிறப்பாக முன்னெடுத்தாள்.
இவ்வாறு கொக்கட்டிச்சோலை ஆலயத்தின் வரலாற்றுடன் நெருங்கிய சான்றைக் கொண்ட மண்முனைப் பிள்ளையார் ஆலயம் உலகநாச்சி அம்மையாரால் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைப்பதற்கு முன்னால் அமைக்கப்பட்டதாகும். அத்துடன் இவ்வாலயத்தின் மூலவரும் சிவலிங்க அமைப்பில் காட்சியளிப்பது விசேட அம்சமாகும். இன்று தாழங்குடா கிராமத்தின் ஒரு பிரிவாகக் காணப்படும் மண்முனை எனும் தொன்மைவாய்ந்த பிரதேசத்தினை வைத்தே மட்டக்களப்பில் அநேகமான பிரதேச செயலாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
(மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு மட்டு நகர், மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை தென் எருவில்பற்று). எனினும் காலப்போக்கில் பல அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட இப் பிரதேசம் பல வரலாற்று எச்சங்களை தற்போதும் தன்னகத்தே கொண்டு திகழும் தமிழரின் ஒரு பொக்கிச பிரதேசமாகும்.மனையப்பிள்ளையார் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் தேரோட்ட நிகழ்வு ஞாயிறு 24.03.2024 ஆம் திகதி பங்குனி உத்தர சுபநாளில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பக்த அடியார்கள் வடம்பிடித்து இழுக்க விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகர் வெளிவீதி வலம்வந்தார். நாளை 25:03:2024 ஆம் திகதி தீர்த்தமாடல் நிகழ்வுடன் ஆலய திருவிழாக்கள் இனிது நிறைவடையும்.
Comments
Post a Comment