மட்டக்களப்பில் சோகம்: காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி.............

 மட்டக்களப்பில் சோகம்: காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி.............

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈரளக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய விவசாயியொருவர் பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் பகுதியிலுள்ள தனது மைத்துனரை இரவு வேளையில் சந்திக்கச்சென்று திரும்பிவரும் போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

திடீர்மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச்சென்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதேவேளை கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள திஹிலிவெட்டை பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் திஹிலிவெட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான 31 வயதுடைய நாகராசா முரளிதரன் என்பவரே உயிரிழந்ததாக, சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளையில் தனது நண்பருடன் குளத்தில் மீன் பிடித்துவிட்டு மரத்தடியில் படுத்துறங்கியவேளையில் யானையின் தாக்குதலுக்கு இவர் இலக்காகியுள்ளார்.

கிரான் திடீர் மரணவிசாரணையதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். சந்திவெளி பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

சடலம் மீதான உடல்கூறுப்பரிசோனை வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்றது.

Comments