ஜனாதிபதி தலைமையில் தேசிய சர்வமத மாநாடு - மட்டக்களப்பிலிருந்து சர்வ மத தலைவர்கள் பங்கேற்பு.............
ஜனாதிபதி தலைமையில் தேசிய சர்வமத மாநாடு - மட்டக்களப்பிலிருந்து சர்வ மத தலைவர்கள் பங்கேற்பு.............
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட கால கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்தார்.
எனவே நாட்டில் நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (28) திகதி நடைபெற்ற “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
17 மாவட்டங்களை உள்ளடக்கி 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட "மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்" திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த சர்வமத மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது மாவட்ட பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ள மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Dr.Felix Neumann), இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டல் எட்வின் சல்க் (Sandile Edwin Schalk), ஐரோப்பியச் சங்கத்தின் உதவித் தலைவர் யொஹான் ஹெஸ் (Johann Hesse) உள்ளிட்டவர்களும், தூதரக பிரதிநிதிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் மஹேஷ் கட்டுலந்த, மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ.விலியம் உள்ளிட்ட அதிகாரிகள், "மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்" வேலைத் திட்டத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சர்வமத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments
Post a Comment