கிழக்குப் பல்கலைக்கழகம் நடாத்தும் சர்வதேச ஆய்வு மாநாடு - 2024

 கிழக்குப் பல்கலைக்கழகம் நடாத்தும் சர்வதேச ஆய்வு மாநாடு - 2024

“தமிழர்களின் கலையும் கலாசாரமும்” இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகமானது வவுனியா பல்கலைக்கழகம், ஆசிய மற்றும் தென்னாசியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றோடு இணைந்து “தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம்” என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் யூன் மாதம் 13,14,15ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மிக விமர்சையாக நடாத்தவுள்ளது.
இந்த ஆய்வு மாநாட்டை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஒத்துழைப்போடு தமிழ் கற்கைகள் துறை ஏற்பாடு செய்யவுள்ளது.
இந்த மாநாட்டின் இணைத் தலைமைகளாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன் செயற்படுகின்றனர்.
மாநாட்டின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் இணைப்பாளராக கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி.சந்திரசேகரம் செயலாளராக தமிழ் கற்கைகள் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் விஜிதா திவாகரன் செயற்படுகின்றனர். மாநாட்டுக் குழுவில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம், வவுனியா பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எஸ்.சுதாகரன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.கருணாநிதி, மொறிசியஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் நரசிங்கன் அம்பிராஜன், றியூனியன் பல்கலைக்கழக பேராசிரியர் யோகாச்சாரி நீலமேகம், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மகாலிங்கம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். ஆதார சுருதி உரைகளை வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தமிழக பேராசிரியர்கள் சிலரும் ஆற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டில் ஆசிய, தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த பல பல்கலைக் கழகங்களையும் உயர் கல்லூரிகளையும் சேர்ந்த அதிகமான புலமையாளர்கள் நேரடியாகப் பங்குபற்றவுள்ளமை சிறப்பம்சமாகும். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளோடு தமிழர்களின் பாரம்பரிய கலை பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நாள் ஆய்வரங்குகள் நிகழ்த்தப்படும்.
ஆய்வரங்கின் உப கருப்பொருட்களாக வரலாறு மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்கள், மொழியும் இலக்கியமும், பாரம்பரிய தொடர்பாடல் முறைகள், பாரம்பரிய கல்வி முறைமைகள், பாரம்பரிய தொழில் முறைமைகளும் சமுதாயமும், கலைகளும் கைவினைப் பொருட்களும், பாரம்பரிய உடைகள், விளையாட்டுக்கள், உணவுகளும் சமையல் மரபுகளும், விழாக்களும் சடங்குகளும், தமிழர்களின் கலை கலாசார மரபுகளில் உலகமயமாக்கத்தின் தாக்கம் ஆகியன அமையும்.
ஆய்வு மாநாட்டைச் சிறப்புற நடாத்துவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாரள்களதும் ஆர்வலர்களதும் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கியமாக புதிய சிந்தனைகளோடும் முறையியல்களோடும் கூடிய நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதப்படலாம். கட்டுரைகள் அமையவேண்டிய முறைமைகள் மற்றும் ஏனைய மேலதிக விபரங்களை கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Comments