முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது பிறந்த தினம் இன்று............

 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த  அடிகளாரின் 132வது பிறந்த தினம் பங்குனி 27ம் திகதி இன்று ............

யாழ் நூல் தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது பிறந்த தினம் இன்று.

சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். சுவாமி விபுலாநந்தர் 1892 பங்குனி 27ம் திகதி அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்கு கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்தார், தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.

இவருடைய ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றவர் ஆவார்

கேம்பிரிட்ஜ் சீனியர்  (Cambridge Senior) பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சில காலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912-ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 

1915-ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டத்தையும் பெற்றார்.

கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. 

அதனால் 1917-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். 

அத்துடன் 1920-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார்.

மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928-இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 

1926-ஆம் ஆண்டிலிருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.

 அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே. மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். 

இதனால் தன் ஆசிரியப் பதவியைத் துறந்து  ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன் சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்குப் பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்இவேதாந்த கேசரி (Vedanta Kesari)  என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். 

மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். 

ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சர்வானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் இவருக்கு வழங்கப்பட்டது.

 அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

செட்டி நாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார்.

 அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 

1934-ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார்இ இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah)  என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934-ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். 

அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

1943-ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராகப் பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். 

தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத் தக்கது.

சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

திருவாங்கூர் திவான் சேர் சி.பி.இராமசாமி ஐயர் தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.

சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.

 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச்சொல்லாக்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களைத் தெற்குக் கோபுர வாயிலின் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். 

சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர்த் தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள். 

நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. 

பாராட்டுரைகளுக்குப் பின்னர்ச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். 

வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஜூலை 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் காலமானார்.

அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. 

ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. 

இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.





Comments