400வயது பாகம்-04: "உயிர்ப்பின் உறைவிடம்", 'குழந்தை இயேசு மறைக்கல்வி ஒன்றியம்', குழந்தை இயேசு சிற்றாலயம் தேவா பாதரின் தேடல்......

400வயது பாகம்-04: "உயிர்ப்பின்  உறைவிடம்", 'குழந்தை இயேசு மறைக்கல்வி ஒன்றியம்', குழந்தை இயேசு சிற்றாலயம் தேவா பாதரின் தேடல்......

"உயிர்ப்பின்  உறைவிடம்"

1972ல்  அருட்தந்தை நோபட் ஒக்கா்ஸ் அடிகளார் பங்குத்தந்தையானார். இவர் காலத்தில் பங்கு மக்களின் ஆன்மிக நலன் கருதி தூர்ந்து போன பாதயாத் திரைகள் மீண்டும் புதுப்பிக்கப்படலாயின. திருவாளர் S. பிரான்சிஸ் ஆசிரியர் இப்பணியில் தந்தை அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தார்.

 1974ல் அருட்தந்தை அன்ரனி ஜோன் அழகரசன் பங்குத் தந்தையாகவும் அருட்தந்தை ஜேசுதாசன் அவர்கள் துணைக் குருவாகவும் இருந்து பணியாற்றினர். இவர்கள் இருவரும். சொற்ப காலமே அதுவும் தற்காலிகமாக பங்கில் பணியாற்றினர். 

1976ல் அருட்தந்தை R.S.லோப்பு அடிகளார் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவ் காலத்தில்தான் மற்றப் பங்குகளைப் போன்று தாண்டவன்வெளிப் பங்கிலும் பங்கு மேய்ப்புப்பனிச் சபை ஆயரின் அறிவுரைக்கேற்ப  உருவாக்கப்பட்டது. பொதுநிலையினர்  உற்சாகமுடன் பணித்துறைகளில் பங்கெடுக்க ஆரம்பித்தனர். 

1978 நவம்பர் 23ல் அடித்த கடும் சூறாவளிக்காற்றினால் மக்களுடைய வீடுகள் மட்டுமல்ல ஆலயமும் மிகவும் பாதிப்புற்றது. ஆலயம் மறைமாவட்ட நிதிபொறுப்பாளர் அருட்தந்தை சந்திர பெர்ண்ண்டோ அவர்களால், கொழும்பு செடெக் நிறுவன நிதி உதவியுடன் புனர் அமைக்கப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி வசதிகளும் வழிபாட்டுக்குத் தேவையான புதிய இசைக்கருவியும் கொடுக்கப்பட்டன. பாடகர் குழுவும் நிறுவப்பட்டது, இவர் 1984 வரை நீண்ட காலம் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 1984ல் அருட்தந்தை வம்பேக் அடிகளார் மறுபடியும் பங்குத்தந்தையாக வந்தார். அவர் 1988 வரை பணியாற்றிய பின் இளைப்பாறி ஆயரில்லம் சென்றார். 

1988ல் அருட்தந்தை ஜெரேமியாஸ் அரசரெத்தினம் அவர்கள் பங்குத்தந்தையானார். இவர் காலத்திலே தான் 'அன்னையின் குரல்' சஞ்சிகை வெளியிடப்பட்டது. இவர் காலத்தில்தான் மறைமாவட்டத்தின் நூறாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. அவ்வேளை தாண்டவன்வெளிப் பங்கிலும் மகா ஞானவொடுக்கம் நடைபெற்றது. குழந்தை இயேசுவின் பத்தி முயற்சியும் இவராலேயே ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவர் காலத்திலேயே பேர்டினன்ஸ் மண்டம்  கட்டப்பட்டது. இவருடையவும் ஒரு சில பொதுநிலையினரின் ஊக்குவிப்பினாலும் 'சீலோம்' வைத்தியசாலையும் ஆரம்பிக்கப் பட்டது. 

1994ம் ஆண்டு அருட்தந்தை அருளானந்தம் தேவதாசன் அவர்கள் பங்குத்தந்தையாக தாண்டவன்வெளி வந்தார். இவரது வருகையினால் பங்கு மக்களின் ஆன்மீக வாழ்வில் புதிய ஒரு அத்தியாயம் உருவானது. மக்களைப் பல சிறு சிறு குழுக்களாக ஏற்படுத்தி வழி பாட்டின் பல பகுதிகளை அவர்களே முன்நின்று நடாத்த ஊக்க மூட்டினார். ஞாயிறு வழிபாடுகளில் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அக்கறையின்றி இருந்த மக்களை வழிபாடுகளில் பங்குபெறச்செய்தார். ஏழ்மையில் பற்றுக்கொண்ட இவர் ஏழைகளின் துயர்துடைப்பதில் முன்னின்று செயல்பட்டார். இளஞ்சிறார்கள் மறையறிவில் வளர்ச்சியும் பற்றும், திறமையும் கொள்ளச் செய்தார். பங்கின் எல்லைக்குட்பட்ட ஐந்து பாடசாலைகளிலும் உள்ள கத்தோலிக்க மாணவர்களை ஒன்றிணைத்து,  கத்தோலிக்க மாணவர் ஒன்றியம் 'குழந்தை இயேசு மறைக்கல்வி ஒன்றியம்' ஆகியவற்றை அமைத்து இம்மன்றங்கள் ஊடாக பல நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் வைத்து மறையறிவில் வளரச் செய்தார்.  மேலும் கள்ளியங்காட்டு  கத்தோலிக்க சேமக்காலையை புனரமைக்க  ஒரு குழுவை ஏற்படுத்திச் சுற்றுமதில் கட்டி, அவ்விடத்தை  "உயிர்ப்பின்  உறைவிடம்" எனப் பெயரிட்டு ஒரு சிற்றாலயத்தையும்  அங்கே கட்டி, பூஞ்சோலையாக மாற்றியமைத்தார். அத்துடன் வடக்கு எல்லை வீதியில் உள்ள குடியேற்றப் பகுதியில் வாழும் கத்தோலிக்க மக்கள் நலன் கருதி அங்கே குழந்தை இயேசு சிற்றாலயம் ஒன்றையும் அமைத்து வாராந்த வழிபாடும் சில நாட்களில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் இடமாக மாற்றினார். இவர் 2001ம் ஆண்டு வரை தன் சேவையை தாண்டவன்வெளி ஆலயத்திற்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அடுத்த தொடர் தொடரும் வரை காத்திருப்போம்..........

அருட்தந்தை தேவதாசன் அடிகளாரால் திசவீரசிங்கம் சதுக்கத்தில் உருவாக்கப்பட்ட குழந்தை இயேசு சிற்றாலயம்.......

தேவதாஸன் அடிகாளாரின் காலத்தில்  பூங்சோலை உயிர்பின் உரைவிடமாகிய கள்ளியங்காடு சேமக்காலையின் ஒரு தோற்றம்....

தேவதாஸன் அடிகாளாரின் காலத்தில்  பூங்சோலை உயிர்பின் உரைவிடமாகிய கள்ளியங்காடு சேமக்காலையின் ஒரு தோற்றம்....


Comments