400வயது பாகம்-03: ஜேக்கப் அலெக்சாண்டர் அடிகளார் காலத்தில் கள்ளியங்காடு சேமக்காலையைச் சுற்றி ஒரு மதில்...........
400வயது பாகம்-03: ஜேக்கப் அலெக்சாண்டர் அடிகளார் காலத்தில் கள்ளியங்காடு சேமக்காலையைச் சுற்றி ஒரு மதில்...........
1963ம் ஆண்டில் பங்குத்தந்தையாக வந்த ஜேக்கப் அலெக்சாண்டர் அடிகளார் குருமனையைப் புதுப்பித்து முன்பாக உள்ள இரு அறைகளையும் கட்டினார். 1967ம் ஆண்டில் திருக்குடும்பக் கன்னியர்கள் தாண்டவன்வெளிக்கு வந்து தங்கள் இல்லத்தை அமைத்துப் பணிபுரிய ஆயர் கிளெனி அவர்களால் ஓழுங்கு செய்யப்பட்டது. அதற்காக ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த வீடும் வளவும் வாங்கப்பட்டது. கன்னியர்களும் 1967 ஆகஸ்ட் மாதம் வந்திறங்கினர்.
பின்னர் இளம் பெண்களுக்கு தையற்கலை கற்பிப்பதற்காக பங்கின் புனித வின்சன் டி போல் சபையினர் 1969ல் ஒரு சிறு கட்டிடம் அமைத்து அப்பணியையும் திருக்குடும்பக் கன்னியர் வசமே கொடுத்தனர். இக்காலகட்டத்தில் தான் தாண்டவன்வெளி பங்குமக்கள் கள்ளியங்காடு சேமக்காலையைச் சுற்றி ஒரு மதில் கட்ட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். அதற்கு அலெக்சாண்டர் அடிகளாரும் சம்மதம் கொடுத்தார். எனவே திருவாளர்கள் தவராசா (போஸ் மாஸ்டர்), சாமுவேல் ஜோசப், அன்னதாஸ் ஆகியோர் முன்வந்து நிதி சேகரித்து அதை ஆரம்பித்தனர், அவர்களால் 30 அடி நீளமான ஒரு மதில் பகுதியை மட்டுமே கட்ட முடிந்தது. பின்னர் நிதியில்லாமையினால் அது தொடரப்படாமலே கிடந்தது. அருட்தந்தை அலெக்சாண்டர் அவரது காலத்தில் தான் திருப்பலி பாடல்களை போதகர் கே.யேசுராஜா அவர்கள் இறைமக்கள் பாடுவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக அனுமதியையும் வழங்கி இருந்தார். அருட்தந்தை 1971 பங்குனி வரை கடமையாற்றி திருமலை சின்னக்கடை பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
1971 பங்குனி புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை F.M.செலர் அடிகளார் நியமிக்கப்பட்டார். அவர் பங்கிற்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே தாண்டவன்வெளி பகுதியில் உள்ள எல்லாக கத்தோலிக்க குடும்பங்களையும் முறையாக இல்லத் தரிசிப்புச் செய்து அவர்களுடைய சகல விபரங்களையும் சேகரித்தார். அப்போது அவருடன் துணைககுருவாய் இருந்த டோமினிக் சாமிநாதன் அடிகளாரை தாண்டவன்வெளியின் ஒரு பகுதியாய் இருந்த இருதயபுரத்திலும் அதே வேலையைச் செய்யுமாறு பணித்தார். பின்னர் இருதயபுரமும் அதிகமான கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்டதாக விளங்கியபடியல் இருவரும் ஆயர் இக்னேசியஸ் கிளெனி அவர்களைச் சந்தித்து இருதயபுரத்தை தனி ஒரு பங்காகப் பிரிக்குமாறு கோரினர். ஆயரும் செவிமடுத்து அப்படியே புதிய பங்காக இருதயபுரத்தை 1970ம் ஆண்டில் பிரகடனம் செய்து, அதன் பங்குத் தந்தையாக தாண்டவன்வெளிப் பங்குத் தந்தையையே நியமித்து இரு பங்குகளையும் பராமரிக்குமாறு பணித்தார்.
அருட்தந்தை செலர் அடிகள் இருதய நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால், 1971 புரட்டாதி மாதம் திடீர் மரணம் அடைந்தார். அவருக்குப்பின் 1971 ஐப்பசியில் அருட்தந்தை பீற்றர் துரைரெட்ணம் அடிகள் கனடாவில் தனது மேற்படிப்பை முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும் போது அவரையே தாண்டவன்வெளிப் பங்குத்தந்தையாக நியமித்தார். துரதிஷ்டவசமாக அருட்தந்தை பீற்றர் துரைரெட்ணம் அடிகளார் மோல்ட்டா தீவில் வைத்து காலமானர். அவரை அங்கேயே அடக்கம் செய்தனர். பின்னர் சில மாதங்கள் அருட்தந்தை சாமிநாதன் தற்காலிக பங்குத்தந்தையாகக் கடமையாற்றினார். அவ்வேளைதான் 2ம் வத்திக்கான் சங்கப் படிப்பினையின்படி புதிய முறைத் திருவழிபாட்டுக்கேற்றாற்போல் ஆலயப்பகுதி திருத்தியமைக்கப்பட்டது. இதனைத் திருவாளர் ரெல்சன் பேர்டினன்ஸ் முன்நின்று சகல பொறுப்புக்களையும் தானே சுமந்து செய்து முடித்தார்.
அவ்வேளை பன்னெடுங்காலமாக பீடத்திற்குப் பின்னால் இருந்த மரத்தாலான பீட அலங்காரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. மேலே ஒரு பாடுபட்ட சிலுவை மரம் பூட்டப்பட்டது. கழற்றப்பட்ட அந்த மரத்தால் செய்யப்பட்ட அலங்காரங்கள் அனைத்தும் சிலாப மறைமாவட்டத்தின் புத்தளப்பகுதியில் உள்ள பாத்திமா ஆலயத்திற்கு நன்கொடையாக சாமிநாதன் அடிகளால் அளிக்கப்பட்டது. அதன் பின் 1971 ஐப்பசியில் அருட்தந்தை சைமன் பெர்ணந்து அவர்கள் தாண்டவன்வெளி - இருதயபுரம் பங்குகளின் தந்தையாக நியமிக்கப்பட்டார் சாமிநாதன் அடிகள் மறை மாவட்ட இளைஞர் சமூகநலத்துறை இயக்குனராகவும் ஆயரின் செயலராகவும் நியமனம்பெற்று ஆயரில்லத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.
Comments
Post a Comment