ஆரையம்பதியில் இடம்பெற்ற பிரதேச பொங்கல் விழா...........

 ஆரையம்பதியில் இடம்பெற்ற பிரதேச பொங்கல் விழா...........

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிளை ரீதியான பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்தன.
ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்த மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு மகேந்திரராசா ரஜீவன் அவர்களின் ஆன்மீக உரையுடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் லோகினி விவேகானந்தராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மனோரஞ்சனி ஜெயச்சந்திரன், கணக்காளர் வல்லிபுரம் நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் சின்னத்துரை திவாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாவிலங்கன்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், உடுக்கு இசை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உழவர் பாடல் , கிராமிய பாடல் என பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மண்முனை பகுதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகம், முதியோர் சங்கம், மீனவர் சங்கம், ஹெயார் நுன்நிதிச் சங்கம் என பல அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.




Comments