இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு....

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு....

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 47 மேலதிக வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் (21) திருகோணமலையில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொதுச் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வு மூவருக்கிடையிலான போட்டியாக அமைந்தமையால், இக்கூட்டம் முக்கியத்துவம்மிக்கதாக தமிழ் அரசியற் தரப்பில் பார்க்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பு, இரகசிய வாக்களிப்பாக இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு 184 வாக்குகளும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 47 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments