கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிக்க முயற்சி...........
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக இப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
2024ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோது பிரதான உரையாற்றிய உபவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் ஆரம்பமான இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க பதிவாளர் அ.பகிரதன் பல்கலைக்கழக கொடியினை ஏற்றி வைத்தார். கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, தேசிய கீதத்துடன், போர் வீரர்கள் உள்ளிட்ட தாய்நாட்டுக்கான உயிர்த்தியாகம் செய்த சகலரும் நினைவுகூறப்பட்டனர்.
பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசி உரை வழங்க, பொதுச் சேவை சத்தியப் பிரமாண உறுதி மொழியினை பதிவாளர் நிகழ்த்தி வைத்தார். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்கு குறித்து புள்ளிவிபர தரவுகள் அடங்கிய உபவேந்தரின் விளக்கம் இந்நிகழ்வில் முக்கிய இடத்தினை பிடித்திருந்தது. அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது இலங்கை பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 12வது இடத்தில் இருப்பதுடன், உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 5206 உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 1 வளாகம், 1 நிறுவகம் மற்றும் 10 பீடங்களை உள்ளடக்கி 355 கல்விசார் உத்தியோகத்தர்கள் அடங்கலாக மொத்தமாக 880 ஊழியர்களுடன் சிறப்பாக இயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
2023ம் ஆண்டில் இது பல்வேறு முக்கிய அடைவுகளை எட்டியுள்ளதுடன், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான பகுதியில் பட்டப்பின் கற்கைகள் பீடம் நிறுவப்பட்டுள்ளதுடன், திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு திணைக்களங்கள் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படுகின்ற பீடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மேலதிகமாக சட்டம், பொறியியல் உள்ளிட்ட பல பீடங்களும், திணைக்களங்களையும் உருவாக்கும் முன்மொழிவுகள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்றதுடன் அவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகமானது கோப் சிற்றி, உளவள ஆலோசனை நிலையம் மற்றும் தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான பிரத்தியேக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு இந்த மாவட்டத்தில் சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் இந்தப் பிராந்திய மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முகமாக 'திறந்த தினம்' எனும் பெயரில் பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கான நிகழ்வை நடாத்தியமை பற்றியும் விபரித்தார். பிராந்திய அபிவிருத்தியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை பொதுமக்களும் மற்றும் மாவட்டத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளில் பல்கலைக்கழகத்தின் வகிபாகத்தை மாணவர்களும் நேரடியாக அவதானிக்க வாய்ப்பு இதனூடாக ஏற்பட்டுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
2023ம் ஆண்டு, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தலில் கிழக்குப் பல்கலைக்கழகம் 'பீ' தரத்தினை பெற்றுக் கொண்டமை மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு நிகழ்வை தலைமையேற்று நடாத்தியமை என்பன இந்த பல்கலைக்கழக வரலாற்றில் மைல்கற்கள் எனக் குறிப்பிட்டார்.
உலக வங்கி நிதி உதவியின் கீழ் இப்பல்கலைக்கழகத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் உலக வங்கியால் பாராட்டத்தக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வெறியேறும் பட்டதாரிகள் பல்வேறு தொழிற்துறைகளில் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாற்றி வருவதுடன்இ இப்பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளின் வேலையின்மையை குறைக்கும் செயற்பாடுகள் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கல்விச் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு 2023ம் ஆண்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதாகவும்இ வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் பொருட்டு வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2023 ஆண்டைய கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளின் முக்கிய அடைவுகளாக இப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் 54 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச தளங்களில் வெளிவந்துள்ளதுடன்இ விஞ்ஞான ஆராய்சிக்கான 3 ஜனாதிபதி விருதுகள் கிடைக்கப் பெற்றதாகவும்இ இதில் இரு விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக முதுமானி மாணவர் ஒருவருக்கும் விருது கிடைத்துள்ளது.
இப்பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவிலாக காப்புரிமை கிடைத்துள்ளது. அத்துடன் பனை ஓலையில் எழுதப்பட்ட 27000 கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன உலகிற்கு ஏற்றால்போல் தயார்படுத்தல் மற்றும் ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும்இ நாட்டின் நிதி நிலையைக் கவனத்திற் கொண்டு பல்கலைக்கழக செயற்பாடுகளை குறைந்தளவு நிதிகளைப் பயன்படுத்தி உச்ச அளவிலான அடைவுகளை எட்ட முயற்சித்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதில் பிரதி உபவேந்தர், நிதியாளர், பீடாதிபதிகள், நூலகர், சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், திணைக்கள தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment