மட்டக்களப்பின் பொக்கிஷங்களில் ஒருவர் ஈழத்து பூராடனார் இவரைப்பற்றி கட்டாயம் படியுங்கள் தயவு செய்து............
மட்டக்களப்பின் பொக்கிஷங்களில் ஒருவர் ஈழத்து பூராடனார் இவரைப்பற்றி கட்டாயம் படியுங்கள் தயவு செய்து............
இவரைப்பற்றி இந்தியாவின் புதுச்சேரியில் வசிக்கும் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்காக, பெரியது தான் மனம் பெரியதாக இருந்தால் இந்த மட்டக்களப்பு பொக்கிசத்தை மனம் விட்டு வாசித்து பாருங்கள்.
ஈழத்துப் பூராடனாரின் தமிழ் இலக்கியப் பணிகள்...............
தமிழ் இலக்கிய வரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுத முடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில் கொண்டு எழுத வேண்டிய அளவில் தமிழ் கூறும் நல்லுலகின் பரப்பு அகன்றுள்ளது. உலகம் பரவிய தமிழர்கள் படைப்பு இலக்கியங்களையும், பாடநூல்களையும், மொழி பெயர்ப்பு நூல்களையும், நாட்டார் வழக்காற்றியல் நூல்களையும், பிற ஆய்வு நூல்களையும் வழங்கியதோடு, கணிப்பொறி, இணைய தளங்களில் தமிழைப் பயன்படுத்தி மின்னணு ஊடகப் பயன்பாட்டிற்குத் தமிழைக் கொண்டு சென்று தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தனர். அயல்நாட்டில் வாழும் தமிழர்களுள் அறிஞர் ஈழத்துப்பூராடனார் குறிப்பிடத் தகுந்தவர். இவர் படைப்பு நூல்களாலும், மொழிபெயர்ப்பு நூல்களாலும், ஆய்வு நூல்களாலும், தொகுப்பு நூல்களாலும், பதிப்புப் பணிகளாலும் தமிழன்னைக்குப் பல்வேறு நல்லணிகளை அணிவித்துப் பெருமை சேர்த்துள்ளார். இவர் தம் வாழ்க்கையையும், தமிழ்ப்பணியையும் இக்கட்டுரை நினைவு கூர்கிறது.
ஈழத்துப்பூராடனாரின் இளமைப்பருவம்......................
கனடாவில் இன்று வாழும் ஈழத்துப்பூராடனார் இலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928இல் பிறந்தவர். இவர் தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும். செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.
இவர் தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிஸ்த மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும், குடந்தையிலும் (தமிழகம்) பயின்றவர்.
இலங்கையில் தம் ஆசிரியர் பணியை முப்பத்தைந்து ஆண்டுகள் செய்து 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்பொழுது கனடாவில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் ஈழத்துப் பூராடனார்க்கு அகவை எண்பதை நெருங்குகிறது. தள்ளாத அகவையிலும் தமிழ்ப் பணிபுரிவதில் சோர்வின்றிக் காணப்படுகிறார். உடலில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது எழுதுவதிலும், அச்சிடுவதிலும், அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதிலும், அன்பர்களுக்கு மடல் வரைவதிலும் ஈடுபட்டு விருப்போடு செயல்பட்டு வருகிறார். இவர் இளம் அகவையில் பெற்ற பல்வேறு பயிற்சிகள் இவருக்கு இன்றளவும் தமிழ்ப்பணி புரிவதற்குத் துணையாக உள்ளது.
ஈழத்துப்பூராடனார் இளம் அகவையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதுடன் அமையாமல் ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றவர். தமிழ்மொழியில் நல்ல புலமை பெற்றதுடன், ஆங்கிலம், சிங்களம் முதலான மொழிகளையும் நன்கு அறிந்தவர். ஈழத்துப்பூராடனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும். இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர், கலாநிதி ஏ.பெரியதம்பிப் பிள்ளைப் பண்டிதர் முதலானவர்கள் வழியாக இவருக்குத் தமிழறிவும் தமிழுணர்வும் கிடைத்தது.
ஈழத்துப்பூராடனார் தமக்குப் பதினேழு அகவை இருக்கும் பொழுது பாடல் வரைந்து அதனை வீரகேசரி இதழில் (1945 சனவரி) வெளிவரச் செய்தார். அதனைக் கண்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஈழத்துப்பூராடனாரை அழைத்து எழுத்துத் துறையில் ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்த பொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, சிறீலங்கா முதலான ஏடுகளில் எழுதி, கதை, கட்டுரைகள், தொடர்கள் வெளிவந்தன. அதுபோல் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன், கல்கி, திங்கள், ஆனந்த விகடன், கலைமகள் போன்ற ஏடுகளிலும் எழுதினார். 1954 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் ஈழத்துப்பூராடனாரின் பேச்சு ஒலிபரப்பாகத் தொடங்கியது.
ஈழத்துப்பூராடனார் இலக்கிய ஆர்வம் நிறைந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்தம் இலங்கையில் தேற்றாத்தீவு இல்லத்தில் அமைந்திருந்த நூலகம் ஆகும். அங்கிருந்த நூல்கள் யாவும் ஈழத்துப்பூராடனாரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன. கட்டம் செய்யப் பெற்று, வரிசை எண் இடப்பட்டு, பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரிய நூல்களின் சேமிப்பகமாகக் காட்சியளித்தது. ஆனால் அங்கு இருந்த போர்ச்சூழலும் குடும்பம் கனடாவிற்குக் குடிபெயர்ந்ததாலும் நூல்கள் சரியாகப் பராமரிக்க முடியாமல் சிதைந்தன.
இந்நூலகத்தில் தமிழ். ஆங்கிலம், சிங்கள மொழிகளில் அமைந்த பல்லாயிரம் நூல்கள் இருந்துள்ளன. இவற்றுள் கலைக் களஞ்சியம், அகராதிகள், இலக்கண, இலக்கிய நூல்கள், ஆய்வு நூல்கள், நெடுங்கதைகள், மருத்துவம், சோதிடம், ஓவியம், அறிவியல், வடமொழி மறைநூல்கள், சித்தாந்த நூல்கள், சைவம். வைணவம், கிறித்தவம், இசுலாம், பொளத்தம் சார்ந்த நூல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இதுநாள்வரை வெளிவந்திருந்த திரைப்படப் பாடல்கள், வசனங்கள் முதலியனவும் இருந்தன. இவற்றுடன் சிற்றிலக்கிய நூல்கள், அம்மானை, பெரியெழுத்துக் கதைகள், 1938 இலிருந்து இலங்கைப் பாடசாலைகளில் பயன்பாட்டிலிருந்த புத்தகங்கள், செய்யுள் நூல்கள், கணக்கு, வரலாறு, புவியியல், பொருளியல், ஆசிரியர் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட உளவியல் நூல்கள், கல்விநூல்கள், கற்பித்தல் முறைகள், தேர்வு வினாக்கள், பல்வேறு இதழ்கள், இதழ்களின் நறுக்குகள், பல்வேறு கைப்படிகள் எனப் பல்வேறு நூல்கள் இருந்தன. இவை ஈழத்துப்பூராடனாரால் பெரும் பொருள்செலவில் வாங்கிப் பாதுகாக்கப்பட்டவை.
ஈழத்துப்பூராடனார் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தந்தையார் நடத்தி வந்த மனோகரா அச்சகத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தார். தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் அச்சகப்பொறுப்பு முழுவதையும் கவனிக்க வேண்டிய நிலை ஈழத்துப்பூராடனாருக்கு அமைந்தது. 1980-1984 ஆம் ஆண்டுகளில் ஈழ விடுதலைப்போர் வடிவம் பெற்ற பொழுது போராட்டக் குழுவினர்க்குத் துண்டறிக்கை அச்சிட்டு அளித்தமையை அறிந்த அரசும் காவல்துறையும், இராணுவமும் இவரின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தொடங்கின. பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார். எனவே இனியும் இலங்கையில் தங்கியிருப்பது சரியில்லை என முடிவெடுத்துத் தம் மனோகரா அச்சகத்தை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு, கனடாவிற்குக் குடிபெயர்ந்தார்.
ஈழத்துப்பூராடனார் ஈழத்தில் வாழ்ந்த பொழுது இவர்தம் தமிழ்ப்பற்று அறிந்த அரசினர் இவர்தம் ஈழத்துப்பூராடனார் என்னும் புனைபெயரில் அமைந்திருந்த ஈழம் என்னும் சொல்லைப் பயன் படுத்தக்கூடாது எனக்கண்டித்தனர். (1979முதல் அரசினர் ஈழம் என்ற சொல்லைப் பயன் படுத்தியவர்ளைக் கண்காணிக்கத் தொடங்கியமையை நினைவிற் கொள்க).
ஈழத்துப்பூராடனார் 1985 இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்குச் சென்ற பிறகு தமிழர்கள் பலரும் குடிபெயர்ந்து வசிக்கத் துணையாக இருந்தார். தமிழ்மக்கள் பயன்பெறும் வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார். அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம், நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர் தம் மகன் சார்ச் இதயராச் அவர்கள் வழியாகத் தமிழ் மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை, தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்) (1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.
ஈழத்துப்பூராடனார் எழுத்துப்பணிகள்...............................
ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம்பெயரிலும், கதிர், கதிர்வள்ளிச் செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். இவர் தம் எழுத்தாளுமை பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது.
பதிப்புப்பணிகள்.......................
ஈழத்துப்பூராடனார் தாம் பல நூல்களை எழுதியதுடன், தம்மையொத்த எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவும், பதிப்பிக்கவும் பல்வேறு வகைகளில் துணை நின்றுள்ளார். இலங்கையில் இருந்த பொழுது தம்முடைய மனோகரா அச்சகம் வழியும். கனடாவில் ரிப்ளக்சு அச்சகம் வழியும் பல்வேறு நூல்கள் வெளிவரத் துணையாக இருந்துள்ளார். மேலும் தமிழகத்தில் நல்ல நூல்கள் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்கில் இவர் நெறிப்படுத்தலில் பொன்மொழிப் பதிப்பகம் செயல்படுகின்றமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது (பொன்மொழிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் (வழி). பெரம்பலூர் மாவட்டம்-612901). ஈழத்துப்பூராடனார் எழுதத் துடிக்கும் நூலாசிரியர்களை இனங்கண்டு அவர்களின் நூல்களைத் தாமே முயன்று பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டவர். இவருடைய உதவியால் நடராசா, சற்குணம் ஆகிய இருவரும் எழுதிய நாவலர் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலும், கா.சிவப்பிரகாசம் அவர்களின் விபுலானந்தரின் கல்விச்சிந்தனைகள் நூலும், ச.நவரத்தினத்தின் கிழக்கின் பேரொளி புலவர்மணி நூலும், சிவகுமாரன் கதைகள்
ஈழத்துப்பூராடனார் மொழிபெயர்ப்புப் பணிகள்.................
ஈழத்துப்பூராடனார் பிறமொழி அறிவின் துணை கொண்டு பல நூல்களைத் தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார். இவற்றுள் ஆங்கிலத்திலிருந்து புகழ் மிக்க கிரேக்க காவியங்களான இலியட், ஒடிசியை மொழி பெயர்த்தமை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவ்வாறு மொழி பெயர்த்த பொழுது கிரேக்க நூல்களின் மூலநூலைத் தழுவித் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார். கோமரின் இலியட் காவியம் 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியம் 2400 விருத்தப்பவாகவும் (1990) படைக்கப்பட்டுள்ளன. மேலும் கிரேக்க நாடகங்கள் பல பன்னிரண்டு தொகுதிகளாகவும் இவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘சொபிக்கொலசின் நாடகங்கள்’ ‘அயிலசியசின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கப் பெருமைக்கு உரியன.
ஈழத்துப்பூராடனார் பலதுறை அறிவுபெற்றவர். தமிழின் இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் பல நூல்களை இயற்றியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என இவர் எழுதியுள்ள நூல்களும் அறிக்கைகளும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். கணிப்பொறி உலகில் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்பது இவர் கொள்கை. தாம் இதுநாள்வரை படைத்துள்ள நூல்கள் யாவற்றையும் பழைய எழுத்து வடிவுகளில் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அவ்வகையில் இவர் படைத்துள்ள தமிழ் எழுத்துகளின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல் (உரையுடன்), தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவைதானா? தமிழ் அச்சுக்கலையில் மின்கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம் என்பன தமிழுலகம் அறியத்தகும் நூல்களாகும். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை எனவும், தேவையற்றது எனவும் சொற்போர் புரியும் நாம் அனைவரும் படித்து இன்புறத்தக்கன. அதுபோல் பழைய தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பினர். இது குறித்து இவர் வெளியிட்ட அறிக்கை உலகம் முழுவதும் இவரால் அனுப்பி வைக்கப்பெற்றது.
இசைத்தமிழ் நூல்கள்..................
ஈழத்துப் பூராடனார் இசைத்தமிழ் குறித்த நூலொன்றையும் வெற்றிலை (பக்.80) என்னும் பெயரில் இசைப்பாடலாக எழுதியுள்ளார்
நாடகத்தமிழ் நூல்கள்................
ஈழத்துப்பூராடனார் தமிழின் ஒரு பிரிவான நாடகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். இவை உரையாகவும், செய்யுளாகவும் அமைகின்றன. மதங்கசூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார். இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்து கிடந்தன. இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப்பூராடனார் மதங்க சூளாமணியின் மறு பதிப்பாகவும், ஆய்வாகவும் கருதும்படி கூத்து நூல்விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலின் சிறப்பு என்னவெனில், பாடல்களுக்கு உரைவரையும் போக்கே தமிழ் உலகில் காணப்படுவது. நம் ஈழத்துப்பூராடனார் விபுலானந்தரின் உரைக்குப் பாடல் எழுதியுள்ளார்.
ஈழத்துப்பூராடனார் கூத்தர் வெண்பா (821 செய்யுள்), கூத்தர் அகவல், நாடகத்தமிழ், மணிமேகலை (தென்மோடி). சிலப்பதிகாரம் (வடமோடிக்கூத்து), கனடாக்குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழமரபு வழி இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவற்திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை நாடகத்துறையில் உருவாக்கியுள்ளார்.
ஈழத்துப்பூராடனாரின் தமிழழகி காப்பியம் என்னும் நூல் ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. தமிழரின் மொழி,கலை, பண்பாடு, இனம், வரலாறு, இலக்கம், இலக்கியம் பற்றிய பல தகவல்களைக் கொண்டு இந்நூல் உள்ளது. ஒவ்வொரு காண்டமும் 300 பக்கங்களைக் கொண்டது.
ஈழத்துப்பூராடனாரின் வரலாற்று நூல்கள்
ஈழத்துப்பூராடனார் ஈழத்தின் வரலாற்றை அறிவதற்குப் பயன்படும் வண்ணம் யாரிந்த வேடர் (1965), ஈழத்தின் வரலாறு (1986) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
ஈழத்துப்பூராடனார் உரைநூல்கள்..................
ஈழத்துப்பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பது போல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர். அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம் (வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம் (இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
ஈழத்துப்பூராடனார் பனை ஓலைகளிலிருந்தது சில நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் கபோத கா, தை (1970) இரண்ய சம்கார அம்மானை (1966) குறிப்பிடத்தக்கன.
ஈழத்துப்பூராடனார் சிற்றிலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்டநூலையும், ஈழத்துப் போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை தவிர வறுமைப்போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத்தமிழ் (1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை (1984), புலவர் மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
ஈழத்துப்பூராடனார் எழுதிய நூல்களுள் அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றும் நூல்கள் அவர் மட்டக்களப்பு தொடர்பில் இயற்றப்பட்டவற்றை எனில் மிகையன்று. ஏனெனில் இந்நூல்கள் மட்டக்களப்பு வரலாறு அறிவிப்பதோடு அமையாமல் அங்கு வழக்கிலிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள், வாழ்க்கை முறைகள், பண்பாடு எனப் பல்துறைப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நூல்கள் வெளிவந்துள்ளன.
அவ்வகையில்,
1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி (1984)
2.மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை (1984)
3.நீரரர் நிகண்டு (1984)
4.மட்டக்களப்புச் சொல்வெட்டு (1984)
5.மட்டக்களப்புச் சொல்நூல் (1984)
6.மட்டக்களப்பு மாநில உபகதைகள் (1982)
7.சீவபுராணம் நெடுங்கதை (1979)
8.மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள் (1978)
9.மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள் (1980)
10.மட்டக்களப்பியல்
11.மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்
12.கன்னங்குடா உழுதொழிற்பள்ளு
13.மீன்பாடும் தேன்நாடு
14.வசந்தன்கூத்து ஒருநோக்கு
15.வயலும் வாரியும்
16.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை முதலியன குறிப்பிடத்தக்கன.
ஈழத்துப்பூராடனார் கிறித்தவசமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தம் வாழ்க்கை முறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத்தழுவிப் போற்றும் வகையினது. இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம் (1986) கிறித்தவ சமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவசமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார். இவர் தம் தமிழ்ப் பணியைப் போற்றி இசுலாமிய சமயம் சார்ந்த பெரியவர்கள் பாராட்டு செய்துள்ளனர். இவரின் வினைப்பாடுகளும் வெளிப்பாடுகளும் தமிழ் தமிழர் நலம்சார்ந்து அமைந்தது.
ஈழத்துப்பூராடனார் பெற்ற சிறப்புகள்..............
ஈழத்துப்பூராடனார் தன்னலங் கருதாமல் தமிழ் நலம் கருதிச் செயல்பட்டதால் இவர் தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன. இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடக சேவை விருது (1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கியமணி விருது, கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப்பதக்கம் (1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும் (1987), மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப்புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர் தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும் (Doctor Of Letters) (2000), தமிழர் தகவல் விருது (1992), தாமோதரம் பிள்ளை விருது (1998) முதலியன குறிப்பிடத் தக்கன.
ஈழத்துப்பூராடனார் வெற்றிக்குக்காரணம்..................
ஒரு மாந்தன் இல்வாழ்க்கையிலும், இலக்கிய உலகிலும் இணைந்து வெற்றிபெறுவது அரிதாகவே நிகழும். அத்தகு அரிய வாழ்க்கை ஈழத்துப்பூராடனார்க்கு அமைந்துள்ளதைப் பெருமையோடு சுட்டிச் சொல்ல வேண்டும். அவர் தம் அருமை மனைவியார் வியறிசு பசுபதி அவர்கள் தமிழ் பயிற்றுவித்தலில் நல்ல பட்டறிவுடையவர். ஈழத்துப்பூராடனாரின் மக்கட் செல்வங்கள் அச்சுத்துறையிலும், கணினித் துறையிலும் வல்லுநர்கள். எனவே உலகில் முதன் முதல் கணிப்பொறியில் தமிழ்நூல் அச்சிடும் நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். வெற்றியுடன் செயல்படுத்தினர். அம்மக்களுள் ஒருவர் கனடாவில் அச்சுக்கூடம் நிறுவியும் பதிப்புப் பணியில் ஈடுபட்டும் புகழ் பெற்றவர். இன்னொரு மகனார் இதயராச் அவர்கள் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர். ஈழத்துப்பூராடனார் அன்பும் அடக்கமும் உருவானவர். அனைவரிடமும் மனம் ஒன்றிப்பழகுவது இவர் தம் இயல்பு, நன்றி மறவாமை என்னும் பண்பு இவரை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. ஆசிரியர்களிடத்தும், நண்பர்களிடத்தும் இவர்கொண்ட மதிப்பும் சிறப்பும் இவர்தம் சான்றாண்மைக்குச் சான்று.
ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் அமைப்பில் நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத்துறை சார்ந்தும், தமிழக, ஈழத்து, கனடா சார்ந்த பல்வேறு தகவல்களைத் தருகின்றன. இவ்வாறு காலந்தோறும் நூல்களை ஈழத்துப்பூராடனார் வெளியிட்டாலும் இந்நூல்கள் செம்பதிப்பாகத் தமிழ் உலகிற்குக் கிடைக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.
தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்றுள்ள இன்றைய நாளில் நடுவண் அரசும் தமிழக அரசும் விருதுகளை அறிவிக்கும் பொழுதும், அயல்நாட்டில் தமிழ்ச்சேவை புரிந்தவர்களை அடையாளம் காணும்பொழுதும் ஈழத்துப்பூராடனார் போன்ற ஆக்கப் பணி புரிந்தவர்களின் பெயர்களை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
ஈழத்துப்பூராடனார் ஆசிரியப்பணியில் இணைந்து நல்லாசிரியராக விளங்கியதுடன் நாள்தோறும் கற்கத் தக்கனவற்றைக் கற்றும், செய்யத் தக்கனவற்றைச் செய்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர் தம் நூல்கள் தமிழின்அச்சு, இதழியல், கல்வியியல், நாட்டுப் புறவியல், வரலாறு, சமயம், பண்பாடு, இனப்பரவல், திரைப்படம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாகவும், ஆவண மாகவும் உள்ளன. பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவை இவர் தம் படைப்புகள். ஆய்வாளர்களுக்குப் பல்வேறு களங்களில் ஆராய்ச்சி செய்ய உதவுவன.
Comments
Post a Comment