மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்...............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்...............

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை மணல் வீதியற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சரால் இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வீதிகள் அமைக்கும் போது சனத்தொகை மற்றும் நில அமைப்புளை ஆராய்ந்து தரமான வீதிகளை அமைப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், வெள்ள நீர் வடிந்தொடுவதற்கு தடையாக உள்ள காரணிகளை அடையாளம் கண்டு இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் எதிர் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு வீதிகளை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனைகள வழங்கப்பட்டது.
வீதிகள் தேவைப்பாடுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிறவள் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தால் அந்த வளங்களை பயன்படுத்தி வீதிகளின் தூரத்தை அதிகரிக்க முடியுமெனவும், மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி உள்ளிட்ட நகர் பிரதேசங்களிலும் வீதி தேவைப்பாடுள்ள கிராமங்களை இனங்கண்டு பிரதேச செயலககங்களின் தொழில்நுட்ட உத்தியோகத்தர் ஊடாக விரைவாக மதிப்பீட்டறிக்கைகளை சமர்ப்பித்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் வீதிகளை நிறைவு செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் இதன் போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என என பலர் கலந்து கொண்டனர்.

Comments