போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் காத்தான்குடியில் கைது.......
தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், 'யுக்திய' போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க குறிப்பிட்டார்.
கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment