தேசியரீதியில் சாதனை படைத்த ஏறாவூர் அலிகார் மாணவர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு..............
தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக் கொண்ட ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பாராட்டி கௌரவமளித்த நிகழ்வு இன்று (22) திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி ஒன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தேசிய ரீதியில் அண்மையில் நடாத்தியிருந்தது. இரண்டு சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியில் நாடுபூராகவும் இருந்து சுமார் 125 பாடசாலைகள் கலந்து கொண்டன.
தரம் 6 தொடக்கம் 10 வரையிலான மாணவர்கள் குழுவாக நால்வர் கலந்து கொள்ளும் இப்போட்டியில் தரம் 9 ஐச் சேர்ந்த என்.ஊமர் சமீல், எப்.எம்.ஜெசா, ஏ.எஸ்.சீத் சராபத் ஆகியோருடன் தரம் 8 மாணவனான எம்.எப்.அம்மார் ஆகியோர் கலந்து கொண்டு தமது பாடசாலைக்கும், ஊருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆங்கில மொழியில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாவர்களுக்கு அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன், அம்மாணவர்களை வழிநடாத்திய தொழிநுட்ப பாட ஆசிரியர் ஜே.எம்.ஹம்தூன், ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம்.அயாஸ், பாடசாலை அதிபர் மௌஜுத் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இடைநிலைப் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிய கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வித்தியாலயம், குளியாபிட்டிய மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி, மிஹிந்தள மஹா வித்தியாலயம் ஆகிய 5 பாடசாலைகளிலிருந்து ஏறாவூர் அலிகார் வித்தியாலயம் தேசிய ரீதியில் முலதாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் தங்கப்பதக்கம், பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசாக 40 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் கே.சிவகுமார், மாவட்ட மனிதவள அபிவிருத்தி இணைப்பாளர் டபில்யு.மைக்கல் கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம்.பாஸில், ஏ.கர்ணாகரன், உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம்.றிழா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment