மட்டக்களப்பு கலை இலக்கிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நினைவு கூர்ந்த இலக்கிய ஆளுமைகள்.............

 மட்டக்களப்பு கலை இலக்கிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நினைவு கூர்ந்த இலக்கிய ஆளுமைகள்.............

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம், மகுடம் கலை இலக்கிய வட்டம், கதிரவன் கலைக் கழகம், 'கா' இலக்கிய அமைப்பு, அனாமிகா பண்பாட்டு மையம் மற்றும் தென்றல் இலக்கிய இதழ் ஆகியன இணைந்து நடாத்திய அமரர் பேராசிரியர் செ.யோகராசா மற்றும் அமரர் வெ.தவராசா (கவிஞர் ராஜாத்தி) ஆகியோரை நினைவு கூர்ந்த நினைவிடை தோய்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28)ம் திகதி மட்டக்களப்பு தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகுடம் வி.மைக்கல் கொலின் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நினைவிடை தோய்தலில் தமிழ்மொழி வாழ்த்தினை சாமிளா சரீப் இனிமையாகப் பாடி தமிழ்மொழியின் சிறப்பைப் பெருமைப்படுத்தினார்.

இதன் போது அமரர்களான பேராசிரியர் செ.யோகராசா மற்றும் வெ.தவராசா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கமும் இடம்பெற்றது.

அத்தோடு நினைவுப் பேருரைகளை அமரர் பேராசிரியர் செ.யோகராசா தொடர்பாக கவிஞர் ஏ.பீர்முகமதுவும், கவிஞர் வெ.தவராசா தொடர்பாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் மு.கணேசராஜாவும் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற 'தென்றல் சஞ்சிகை' ஆசிரியர் க.கிருபாகரன், 'நீங்களும் எழுதலாம்' சஞ்சிகை ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் மற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இலக்கிய ஆளுமை தொடர்பாக தமது அஞ்சலிகளைப் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் கவிதாஞ்சலியினை கதிரவன் தங்கராசா இன்பராசாவும், நன்றியுரையினை எழுத்தாளர் ச.மணிசேகரனும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இரா.நெடுஞ்செழியன், முன்னாள் கிழக்கு மாகாண முன்பள்ளி பணிப்பாளர் பொன் செல்வநாயகம், கிரான் பிரதேச செயலாளர்  கா.சித்திரவேல் உட்படப் பல இலக்கிய, கல்வித் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.




Comments