மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் கவியரங்கம்..............
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் கவியரங்கானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இன்று (25) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியலின் உழவுத் தொழில் செய்து வரும் சமூகம் சூரியனுக்கும் இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தைத் திருநாளை கொண்டாடி வருகின்றது.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் 1963க்கு முன்பிருந்த மட்டக்களப்பு மாவட்டம் தழுவியதாக பெரும் புலமையாளர்கள் ஒன்று சேர்த்து 1967 ஆண்டு உருவாக்கப்பட்டு முத்தமிழான இயல், இசை நாடகத்தினை வளர்த்த தமிழ்ப்பண்டிதர், வித்துவான், புலவர்களுக்கான கற்கை நெறிகளை தொடங்கி பட்டம், சான்றிதழ் வழங்குதல், நூல் வெளியீடுகள் செய்து கவிஞர், நூல் எழுத்தாளர்களை வளர்த்து ஊக்குவித்தல், மாவட்டம்சார் தமிழ் மரபுகளை கலாசார பாரம்பரியங்களை பேணி கட்டிக்காத்து ஆவணப்படுத்தல் போன்ற செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் தமிழ் சங்க அங்கத்தவர்களினால் பல கவிப்பாக்கள் அரங்கேற்றப்பட்டது.
மட்டக்களப்பில் மத, இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாக தைத் திருநாள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகர் அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் அடிகளார், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சித்திரப்போடி மாமாங்கராஜா, மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா, புத்திஜீவிகள் மற்றும் தமிழ் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment