மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கும் உயர் மட்ட அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!!

 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கும் உயர் மட்ட அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (01)ம் திகதி நடைபெற்றது.
பிறந்திருக்கும் புதுவருடத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், மாவட்டத்தில் மக்களின் தேவைகளை இனம் கண்டு சிறந்த சேவையினை வழங்க உயர் அதிகாரிகளுக்கு இதன் போது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் எமது மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் மாவட்டத்திற்கு அவசியமான கிராமிய வீதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
பிரதேச செயலகங்களில் புதிய தொழில்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை உயர்வத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள திட்டங்களை வகுக்கவேண்டுமென ஆலோசிக்கப்பட்டதுடன், இவ் வருடத்துடன் மாவட்டத்தின் எல்லை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைவரும் முன் வர வேண்டும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் புதிய நுட்பங்களை கையாண்டு விவசாயிகளுக்கு சிறந்த விளைச்சளை பெற்றுக்கொள்வதற்கு அடி மட்டத்தில் இருந்து வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல் போன்ற மேலும் பல மக்கள் நலன்சார் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments