மண்முனைப்பற்று பிரதேச செயலாளரை வாழ்த்தியனுப்பிய உத்தியோகத்தர்கள்.....

 மண்முனைப்பற்று பிரதேச செயலாளரை வாழ்த்தியனுப்பிய உத்தியோகத்தர்கள்.....

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் எட்டாவது பிரதேச செயலாளராக எட்டு ஆண்டுகள் (2016 - 2024) சேவையாற்றி மண்முனைப்பற்று பிரதேசம் நிலைபேறான அபிவிருத்தியை அடையும் நோக்கில் தன்னாலான அர்ப்பணிப்பபான சேவையை  பக்கச்சார்பின்றி  வழங்கி பிரதேசத்தின் கலை, கலாசாரம், விளையாட்டு என பல்துறைகளிலும்  பிரதேச மக்களை சென்றடையும் வண்ணம் கண்ணியமானதாகவும், நேர்த்தியானதாகவும் சேவையாற்றிய பிரதேச செயலாளர்  ந.சத்தியானந்தி அவர்களை வழியப்பும் பிரியாவிடை நிகழ்வு (05) ஆம் திகதி  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
 இந்நிகழ்வின் போது நலன்புரிச் சங்க உறுப்பினர்களால்  பிரதேச செயலாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மலர்மாலைகள் மற்றும் மலர் செண்டுகள், நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இதன் போது தனது சேவைகாலத்தில் தனக்கு கிடைக்கப்பெற்ற நலன்புரிச்சங்கத்தினால் தனக்கென வழங்கப்பட்ட அன்பளிப்பு கொடுப்பனவினை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிரதேச கலைஞர்களுக்காக நன்கொடையாக அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிரதேச செயலாளர்  ந.சத்தியானந்தி அவர்கள் அரச சேவையில் ஏறத்தாழ 30 வருடங்களும், இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்களும் அர்ப்பணிப்புடன் தனது சேவையினை ஆற்றியவராவார். இவரது சேவைக் காலத்தில் இலங்கை நிர்வாக சேவையில் உதவி செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு - கிழக்கு மாகாணம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் - மட்டக்களப்பு, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்), மாகாண கல்வி திணைக்களம் - கிழக்கு மாகாணம், உதவி செயலாளர், கல்வி அமைச்சு - கிழக்கு மாகாணம், மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் (நிர்வாகம்), சுகாதார திணைக்களம் - கிழக்கு மாகாணம், பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனை தென்மேற்கு மற்றும் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - மண்முனைப்பற்று ஆகிய திணைக்களங்களில் உயர் பதவிகளில் தனது சேவையினையாற்றியவர்.  இவர் தற்போது மண்முனைமேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது பெருமைமிக்க விடயமாகும். 








Comments