இனி தனியார் வகுப்புகளுக்கு தடை!

 இனி தனியார் வகுப்புகளுக்கு தடை!

வடமேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை 01.01.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சு மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர்களே பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களைப் பாடசாலை வகுப்பறைகளில் புறக்கணித்து பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாக்குவதாக பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் ஆலோசனையின் பிரகாரம்  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நயனா காரியவசம் தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளின்படி, சில ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பில் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்காக மேற்கொள்வதில்லை எனவும், தமது தனிப்பட்ட வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபற்றாத வகுப்பு மாணவர்களை புறக்கணித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அந்த துரதிஷ்டமான சூழ்நிலையை தவிர்த்து, மாணவர்களுக்கு திருப்தியான வகுப்பறையை உருவாக்கி, அதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்கு சரியான ஆளுமை கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்காக இது மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய செயலாளர், இதன் மூலம் வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் முறையான பங்களிப்பைப் பெற்று அவர்களின் தொழில் கௌரவமும் பெருமையும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012/37 மற்றும் 2012/13 இலக்க சுற்றறிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments