புதிய ஆண்டில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு..............

 புதிய ஆண்டில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு..............

வலுவான எதிர்காலத்திற்கான தொடங்கவுரை எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2024 கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு (01) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான அரச சேவை உறுதியுரையானது பிரதேச செயலாளரினால் வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களும் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் 2023 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் 2024 ஆம் ஆண்டும் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் வெற்றி கொள்வதற்காக அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக மக்களது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உத்தியோகர்களாகிய நாம் அலுவலகத்தில் உள்வருகை கையொப்பமிட்ட அந்த நிமிடத்திலிருந்து தங்களது சுய விடயங்களை புறம் தள்ளி ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களின் நலனுக்காக அக்கறையுடன் சேவையாற்ற வேண்டுமெனவும் சென்ற ஆண்டில் எவ்வாறு சிக்கனமான முறையில் அலுவலக செயற்பாடுகளை திறம்பட மேற்கொண்டது போன்று இவ்வாண்டும் அவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




Comments