மறைந்தார் மட்டுவின் ஆளுமைமிகு கலைஞர் தவராஜா.......
மட்டக்களப்பில் கல்விமானாக, கவிஞனாக எழுத்தாளனாக பல் துறை ஆளுமையாளராக திகழ்ந்த தவராஜா காலமானார். அன்னார் நேற்றைய தினம் (07) கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார்.
வெள்ளக்குட்டி தவராஜா மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தில் பிறந்து, நொச்சிமுனை கிராமத்தில் வசித்து வந்தார். இறுதியாக அவர் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளராக கடமையாற்றியதோடு தனது உடல் நிலை காரணமாக கொழும்பில் அமைச்சில் கடமையாற்றும் போது சுகயீனம் காரணமாக காலமானார்.
பல்துறை ஆளுமையாளனாக பாடசாலைக்காலம் முதல் தன்னை வெளிப்படுத்தி, தான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலங்களில் அப் பிரதேசங்களின் பல்துறைசார் அபிவிருத்திக்கு பங்குபற்றி அப் பிரதேச மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தான் ஒரு கல்விமானாக திகழ்ந்தாலும், அவ் வட்டத்துக்குள் நின்று விடாமல் கலைத்துறையில் பல பரினாமங்களுடாக பரிணமித்து தனது பெயரை இவ் உலகில் நிலை நிறுத்தியுள்ளார். ஓர் நடிகனாய், கூத்துக்கலைஞனாய், சிறுகதை எழுத்தாளனாய், நாடக இயக்குனராய், கலை இலக்கிய விமர்சகனாய், குறும்பட தயாரிப்பாளனாய், 1993 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'படி' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியனாய், பதிப்பாளராய், ராஜாத்தி மற்றும் மனோ, இனியவள் என்கிற புனை பெயர்களுடன் புரட்சிகர கதை புனைந்து தமிழ் வளர்த்த கவிஞனாய், வாழ்ந்தவர் தவராஜா. அவர்களின் இழப்பு மட்டக்களப்பின் கலைத்துறைக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.
பொருளியல் துறை பட்டதாரியான இவர் அரச துறையில் ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்து, பின் இலங்கை நிருவாகசேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட இவர் உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், கிழக்குமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ் உதவிச் செயலாளர், என பல பதவிகளை வகித்து சிறந்த நிருவாகசேவை அதிகாரியாகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
இவரது கலைப்பயணத்திற்கு சான்றாகவும் இவர் சிறந்த எழுத்தாளர் என்பதற்கு சான்றாகவும் தனித்திருத்தல் (கவிதைத் தொகுப்பு), என் கொலை காரர்கள் (சிறுகதைத் தொகுப்பு), மங்கையராய் பிறப்பதற்கே (நாடக நூல்), அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை நூல் எனும் நூல்கள் சான்றுபகர்கின்றன.
Comments
Post a Comment