மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்; அனர்த்தத்தினால் 7225 பேர் பாதிப்பு............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்; அனர்த்தத்தினால் 7225 பேர் பாதிப்பு............

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளது.
நேற்று (01) திகதி பிற்பகல் இரண்டு மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை தொடர் மழையாக இன்று (02) திகதி காலை ஆறு மணியளவில் ஓய்ந்தது. கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மாவட்டத்தில் மாத்திரம் 164.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தின் மண்முனை வடக்கு, காத்தான்குடி, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை தென் தென்மேற்கு பட்டிப்பளை, போரதீவுப்பற்று வெல்லாவெளி மற்றும் எறாவூர்பற்று போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், பெரும்பாலான வீதிகளும் வெள்ள நீரால் நிறைந்துள்ளன.
இதேவேளை மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதுடன் 1231 குடும்பங்களும், 4218 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 குடும்பங்களின் 109 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று (01) காலை 8.30 மணியிலிருந்து இன்று (02) நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் ஏறாவூர்பற்று கரடியனாறு, வந்தாறுமூலை, சித்தாண்டி போன்ற இடங்களில் 443 குடும்பங்களின் 1993 நபர்களும், வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 117 குடும்பங்களின் 598 பேரும், நாவற்குடா, பாரதி புரம் மற்றும் ஜெயந்தி புரம் பகுதிகளில் 59 குடும்பங்களில் 168 நபர்களும், கதிரவெளி 213 பகுதியில் 47 குடும்பங்களின் 139 நபர்களுமாக, மாவட்டத்தில் மொத்தம் 1985 குடும்பங்களில் 7285 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கிரான் புலி பாய்ந்தகல் மற்றும் கின்னயடி பிரம்படித்தீவு, ஈரலகுளம், மயிலவட்டுவான், வாகரை கல்லரிப்பு பகுதிகளுக்குச் செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு படகு சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
இவர்களில் 28 குடும்பங்களின் 82 நபர்கள் மண்முனை வடக்கு நாவற்குடா சாரதா வித்தியாலயம், மெதடிஸ் பாலர் பாடசாலை மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை ஆகிய தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments