400 வயது பாகம்-02: அருட்தந்தையர்களான லாசரஸ்,நோபட் ஒக்கஸ், வம்பேக் ஆகியோரின் பணி தாண்டவன்வெளி பங்கில் .......
400 வயது பாகம்-02: அருட்தந்தையர்களான லாசரஸ்,நோபட் ஒக்கஸ், வம்பேக் ஆகியோரின் பணி தாண்டவன்வெளி பங்கில் .......
இவ்வாறு பல வரலாற்றுத் தடங்களைக் கொண்ட தாண்டவன்வெளி பங்கு கோட்டைமுனை முதல் தன்னாமுனை வரையுள்ள நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்து வந்தது. இப்பகுதி வாழ் மக்களுக்கு இது ஒன்றே வழிபடும் ஆலயமாகவும் இருந்தது. 1835ம் ஆண்டில் பாஸ்கல் மரியாள் என்ற பாஸ்கல் முதலியாரின் மனைவி தாண்டவன்வெளி ஆலயத்துக்கென்று 24 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தார். அதன் பின்னர் பழைய ஆலயத்திற்குப் பதிலாகப் புதிய ஒரு ஆலயம் கல்லினால் கட்டப்பட்டு ஓடுகள் கொண்டு கூரையிடப்பட்டதாக கட்டப்பட்டது. இவ்வாலயம் மட்டக்களப்பு வாவியைப் பார்த்த போன்று கட்டப்பட்டது. ஏனெனில் பயணங்கள் யாவும் அப்போது வாவியினூடாகவே நடைபெற்றன. வீதிகள் அமைக்கப்படவில்லை. பிற்காலத்தில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு- திருகோணமலை வீதி உருவாக்கப்பட்டவேளை இவ்வாலயமும் புனரமைக்கப்பட்டு அதன் முகப்பு புதிய திருமலை வீதியை நோக்கியதாக கட்டப்பட்டது. ஆனால் 19௦7ம் ஆண்டில் மட்டக்களப்பில் வீசிய புயற் காற்றினால் இவ்வாலயமும் பலத்த சேதங்களுக்குள்ளாகியது. பின்னர் ஆலயம் மறுபடியும் புனரமைக்கப்பட்டு வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.
பின்னர் 1935ம் ஆண்டில் இயேசு சபைத் துறவிகள் மட்டக்களப்பில் தியானம் செய்து வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் பழக்கத்தைக் கத்தோலிக்க மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்குடன் அதற்கென மன்றேசா என்னும் பெயரில் ஒரு நிலையத்தை ஆரம்பிக்க முடிவு செய்தனர். அதற்கு அவர்கள் தெரிவு செய்த முதலாவது இடம் தாண்டவன்வெளி ஆலயம் அமைந்திருக்கும் இடமேயாகும். எனவே இவர்கள் ஆலயத்திற்குப் பின்னால் ஒரு சிறு கட்டிடம் கட்டி அதற்கு நான்கு பக்கமும் விறந்தை அமைத்தனர். அக்கட்டிடம் இன்றும் பாடசாலையின் ஒரு பகுதியாக உள்ளது. இக்கட்டிடத்தில் தான் ஞான ஒடுக்கங்களை சகலருக்கும் குழுக்களாக ஆரம்பித்தனர். இச்சந்தர்ப்பங்களை சாதி வித்தியாசங்கள் பாராது, அதனை உடைத்தெறியும் ஒரு இடமாகவும் சகலரும் பாரபட்சமின்றிச் சமமாக நடாத்தப்படும் ஒரு இடமாகவும் பாவித்தனர். பிற்காலத்தில் இக்கட்டிடம் 'கிளெனி' பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டது.
1950ம் ஆண்டளவிலாகும் நோபட் ஒக்கஸ் அடிகளார் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர் தாண்டவன்வெளி பங்கிற்குத் துணைக்குருவாக அனுப்பப்பட்டார். அப்போது தாண்டவன்வெளி பங்குத் தந்தையாக அருட்தந்தை லாசரஸ் அடிகள் கடமையாற்றி வந்தார். அவ்வேளை தாண்டவன்வெளி பங்கு ஒரு கோவிலை மட்டும் கொண்டதாகவே காணப்பட்டது. தாண்டவன்வெளி பங்கில் இரு குருக்கள் பணி செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை பங்குக் குருவாகிய அருட்தந்தை லாசரஸ் தினமும் திருப்பலியினை காலையில் ஒப்புக்கொடுப்பார், மாலை திருப்பலி ஒப்புக்கொடுப்பது இல்லை. அத்துடன் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் முறையும் அப்போது அமுலுக்கு வரவில்லை. இதனால் அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாருக்கு பங்கு வேலைகள் இல்லாதிருந்தது.
பிற்காலத்தில் லாசரஸ் அடிகளாருக்கு பதிலாக வம்பேக் அடிகளார் தாண்டவன்வெளிக்குப் பங்குத் தந்தையாக வந்த வேளை அருட்தந்தை நோபட் ஒக்கஸ் அடிகளாரும் அங்கிருந்து மாற்றலாகி வேறு பங்கிற்குச் சென்று விட்டார்.
தாண்டவன்வெளி பங்கில் மக்கள் தொகை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே வந்ததால் 1955ம், 1956ம் ஆண்டுகளில் அருட்தந்தை வம்பேக் அடிகளாரினால் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிலுவை போன்று இருமருங்கிலும் புதிய இடவசதி கொண்டதாகவும், எல்லாப்பக்கமும் விறாந்தையுடனும் கட்டப்பட்டது. அத்துடன் பங்குமனைக்கு முன்னாலுள்ள லூர்து அன்னை கெபியும் மறுபக்கத்தில் உள்ள பாத்திமா அன்னைக் கெபியும் மணிக்கோபுரமும் அமைக்கப்பட்டன.
அடுத்த தொடர் தொடரும் வரை காத்திருப்போம்..........
Comments
Post a Comment