மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்திற்கு 400 வயது..... பாகம் -01
மட்டக்களப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற தாண்டவண்வெளி காணிக்கை மாதா ஆலயம் 2024ம் ஆண்டு தன் 400வது வருடத்தை பூர்த்தி செய்கின்றது. இதையோட்டி அவ்வாலயம் தொடர்பான ஒரு கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது நமது வரலாறு நாம் தான் பறைசாற்ற வேண்டும், தேடுதல் எனக்கு வெற்றியை தந்துள்ளது தேடினேன், கிடைத்தது பிழைகள் இருந்தால் திருத்தி கொள்வோம், சிறப்பாக இருந்தால் உலகிற்கு எடுத்துறைப்போம். இந்த பாலசிங்கம் ஜெயதாஸனும் ஒரு தாண்டவன்வெளி காணிக்கைமாதா பங்கின் பங்குமகன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
தாண்டவன்வெளிப் பங்கானது 1918ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் ஆயர் பேரருள்திரு கஷ்டன் றொபிஷே அவர்களால் ஒரு தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. அதுவரை தாண்டவன்வெளி, மட்டக்களப்பின் புனித மரியாள்-புனித அந்தோனியர் பங்கின் ஒரு அலகாகவே இருந்து வந்தது. ஆயினும் தாண்டவன்வெளியில் கிறிஸ்தவம் அதற்கு 4௦௦ ஆண்டுகளுக்கு முன்னமே வேரூன்றி வளரலாயிற்று.
400 ஆண்டுகளை நாம் முன்னோக்கி பார்க்கையில் பல வரலாற்று சான்றுகள் தாண்டவன்வெளி ஆலயத்தை மேலோங்கச் செய்கின்றது. 1624ம் ஆண்டிலே தாண்டவன்வெளியில் காணிக்கை மாதாவின் பெயர் கொண்ட ஒரு ஆலயம் தாண்டவன் என்பவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் கட்டப்பட்டிருந்ததாக வரலாற்றுச் சுவடுகள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்லாமல் இவ்வாலயமே மட்டக்களப்புப் பகுதியில் கட்டப்பட்ட முதலாவது கத்தோலிக்க ஆலயம் என்றும் எழுத்துச் சுவடிகள் கூறுகின்றன.
முத்திப் பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளார் மாறுவேடம் பூண்டு ஒரு பிச்சைக்காரன் போன்று தாண்டவன்வெளிப் பகுதிக்கு 1687ல் வந்த போது அங்கு சிறுஓலைகள் கொண்டு கட்டப்பட்ட ஒரு ஆலயம் இருந்ததாகவும், அவ்வாலயத்தில் மக்கள் செபமாலை சொல்லிக்கொண்டிருந்ததை அவர் கண்டு அவர்களோடு செபமாலை சொல்லி மன்றாடியதாகவும், அதன் பின்னரே அவர் தன்னை யாரென்று அங்கிருந்த கத்தோலிக்க மக்களுள் நம்பிக்கைக்குரியவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்குப் பணிபுரிந்தார் என்றும் கூறப்படுகின்றது..
அக்காலத்தில் ஒல்லாந்தரின் உளவாளிகள் ஜோசப் வாஸ் அடிகளாரை கண்டு கொண்டு அவரைக் காட்டிக் கொடுத்ததினால், தாண்டவன்வெளி ஆலயத்தில் உள்ள வம்மி மரத்தில் அவரை கட்டி வைத்து அடித்து மாத்திரமன்றி ஓலையால் கட்டப்பட்ட தாண்டவன்வெளி ஆலயமும் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது. பின்னர் அவரை கைதியாக கண்டி மன்னனிடம் அனுப்பியதாகவும் நம்பகத் தன்மை வாய்ந்த தகவல்கள் நம்மிடம் உள்ளன. புனிதர் ஜோசப் வாஸ் அடிகளார் 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார். அவர் கால் தடம்பதித்த தாண்டவன்வெளி ஆலயத்தில் இப்போது ஓர் சிற்றாலயம் இருப்பது எமக்கு பெருமையளிக்கும் விடயமாகவுள்ளது.
இவைகளுக்கு மேலாக 1546ம் ஆண்டில் போத்துக்கேயப் படைகள் மட்டக்களப்பிற்கு வந்து தரையிறங்கி, மட்டக்களப்பு மன்னனின் மகனுக்கு டொம் லூயி என்று பெயரிட்டுத் திருமுழுக்கு கொடுத்தவேளை அவனுடன் மக்களில் ஒரு பகுதியினரும் திருமுழுக்குப் பெற்றுக் கத்தோலிக்க மதத்தைத் தழுவியதாகப் போர்த்துக்கல் மன்னன் மூன்றாம் ஜோவானுக்கு சைமன் டி கொயிம் பிறர் என்னும் துறவியார் எழுதியமடலில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே தாண்டவன்வெளியில் கத்தோலிக்க மதம் போர்த்துக்கேய௫டைய வருகையுடனேயே வேரூன்றலாயிற்று என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. அது மட்டுமல்லாது 1649ல் மட்டக்களப்பை ஒல்லாந்தர் கைப்பற்றியபோதும், தாண்டவன்வெளி கண்டியரசனின் பிரதேசமாக இருந்தபடியினால் அங்கே கிறிஸ்தவம் எவ்வித பிரச்சனையும் இன்றி வளர முடிந்தது ஆலயமும் கட்டி மக்கள் வழிபட முடிந்ததை நாம் அறிகின்றோம். அங்கு ஓலையால் கட்டப்பட்ட கட்டப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திய ஆலயம் 1695ல் தீக்கிரையாக்கப்பட்ட போது அந்த ஆலயத்தில் இருந்த அன்னை மரியாளின் திருச்சொரூபம் தீயில் எரிந்து சாம்பராகாமல் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது. இது பற்றி நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி சந்திராவி என்னும் இந்துமதப் பெணணுக்கு மரியன்னை கனவில் காட்சி கொடுத்து திருச்சொரூபம் மறைந்து கிடந்த இடத்தை காட்டினர். அவர் அதை எடுத்து மன்னிப்பிள்ளை என்னும் கத்தோலிக்கரிடம் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கொடுத்தார் பின்னர், 1760ல் புதிய ஒரு ஆலயம் கண்டியரசனுடைய அனுசரணையுடன் அங்கு கட்டப்பட்ட போது அந்த அன்னையின் திருச்சுரூபம் மறுபடியும் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு பகிரங்கமாக மக்களின் முன்பாக வைக்கப்பட்டது. இவ்விடயம் பற்றிப் பிற்காலத்தில் 1939ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20ம் நாள் ஆயர் கஷ்டன் றொபிஷே அவர்கள் எழுதிய மடலில் இவ்விடயம் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என்று கூறியுள்ளார். இன்றும் அதே சுருவம் ஆலயத்தில் இருப்பதையும் அதன் அடியில் நெருப்பட்ட அடையாளம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
அடுத்த தொடர் தொடரும் வரை காத்திருப்போம்..........
Comments
Post a Comment