மட்டக்களப்பில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயும் கூட்டம் இன்று (02) நடைபெற்றது............
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயும் கூட்டம் இன்று (02) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் நிலைமைகள், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்குதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
பாதிக்கப்படும் பிரதேசத்தில் உள்ள மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் மாவட்ட செயலகத்தில் விசேட பிரிவொன்று 24 மணிநேரமும் இயங்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள், இரண்டு பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் குடும்ப உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார், உத்தியோகத்தர் சத்தியசயந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரொஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment