மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்............
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் (16) சனிக்கிழமை அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தலைவரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதோடு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் சங்கத்தின் பொருளாளர் க.தியாகராஜா அவர்களால் பொருளாளர் அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொங்கல் விழா தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் அமரர் ஆ.மு.சி.வேலழகன் அவர்களது நூல் வெளியீடு மற்றும் நினைவுப் பேருரை பற்றிய தீர்மானமெடுக்கப்பட்டது.
மேலும் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன. அதனையடுத்து கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பரிசு பெற்ற மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலாபூசணம் கா.சிவலிங்கம் அவர்களை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்களால் வாழ்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.
Comments
Post a Comment