சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மக்கள் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்..............

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மக்கள் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்..............

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளும் மக்கள் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு (29) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோஹிதராஜ் மற்றும் மாவட்ட சமுதாய அடிப்படை அமைப்புக்களின் முகாமையாளர் கே.பகீரதன் ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டனர்.
இச்செயலமர்வு நிரந்தர மக்கள் பயிற்றுனர்களாகப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டமாகவும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு ஊடாக மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் விதமாகவும் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சமுதாய அடிப்படை அமைப்புக்களும், அவை சார்பாக பிராந்திய சமுதாய அடிப்படை அமைப்புக்கள், மாவட்ட அமைப்பு என 35 நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் சமுர்த்திப் பயனாளிகளுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பணிகள், நோக்கம், அதன் நிருவாகக் கட்டமைப்பு, அமைப்புக்களை எவ்வாறு நீண்டகாலத்தில் நிலைபேறான மக்களின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவது என்பன தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் மக்கள் பயிற்றுனர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்களை மேலும் முன்னேற்றி, அதன் பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வழிகாட்டல்களும் பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அஸ்வெசும நலன்புரி மற்றும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான “அருணலு” கடன் திட்டம் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இச்செயலமர்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்படும் 31 சமுர்த்தி வங்கிகளில் தலா ஒவ்வொரு வங்கியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 31 சமுர்த்திப் பயனாளிகள் பயிற்றுனர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு வலுப்படுத்தப்பட்ட சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஊடாக பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments