மட்டக்களப்பில் கராத்தே மற்றும் தாய்வுண்டோ போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு கௌரவம்...............

 மட்டக்களப்பில் கராத்தே மற்றும் தாய்வுண்டோ போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு கௌரவம்...............

2023 ஆம் ஆண்டு மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கராத்தே மற்றும் தாய்வுண்டோ போட்டிகளில் வெற்றியீட்டிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (31) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலையில் SKO கழக தலைவரும் பிரதான போதனாசிரியர் எம்.ரீ.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் அவர்களும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
அதிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாணவர்களது கண்கவர் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரித்தது.
மாவட்டத்தில் உள்ள 17 பாடசாலைகளைச் சேர்ந்த தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சாதனை புரிந்த 150 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கணைகளும், 22வது மூத்தோருக்கான கோலூன்றி பாய்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலம் பதக்கம் வென்ற பீ.ஜெயகுமார் உள்ளிட்ட 2023 ஆம் ஆண்டில் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் சிறந்த பெறு பேறுகளை கராத்தே மற்றும் தாய்வுண்டோ போட்டிகளில் பெற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த சிறந்த பயிற்றுவிப்பாளர்களும் இதன்போது சான்றிகழ், கேடயம் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு தேசிய மற்றும் மாகாண ரீதியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு இதன்போது இராஜாங்க அமைச்சரினால் கராத்தே உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிமனையில் உடற்கல்வி பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பயிற்றுவிப்பாளர்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.











Comments