கிரிக்கெட் சபையின் தலைவர், நிறைவேற்று சபையை பதவி நீக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர்
ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை அரச தரப்பின் வழிமொழிதலுடன் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இடைக்கால குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த நிலையில் அது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுததது கிரிக்கட் சபையின் பல ஊழல், மோசடிகளை சபைக்கு வெளியிட்டார்.
இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் இடைக்கால குழுவுக்கு முழு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் விவாதம் ஒன்றைக் கோரின .
இதனையடுத்து இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு ஆளும் கட்சியும் இணங்கியது.
இதனையடுத்து ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை இன்று வியாழக்கிழமை (9) முழு நாள் விவாதமாக இடம்பெற்றது.
இந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி அரசு தரப்பிலும் பலர் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலர் உரையாற்றியபோதும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராகவிருந்த நாமல் ராஜபக்ஸ விவாதத்தில் பங்கேற்கவில்லை.
விவாதத்தில் உரையாற்றிய ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினர்.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் உட்பட முக்கிய தரப்பினருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபையில் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் இந்த விவாதத்தின் போது நீதிபதிகளின் பெயர் குறிப்பிட்டு ஒருசிலர் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
நீதிமன்ற கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான செயற்பாட்டுக்கு கவலை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க 225 உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு கோரப்படாத நிலையில் பிரேரணை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment