அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி மட்டக்களப்பில் ஆரம்பம்.......

 அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி மட்டக்களப்பில் ஆரம்பம்.......

மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியை கற்று விலகிய இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்றை நெறி இன்று (21) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கற்கை நெறியானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ.எம்.றியாஸின் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இயற்கை அனர்த்தங்களின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் அதன் அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய சமுகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இக்கற்கை நெறியானது கிராம மட்டங்களில் இயற்கை அனர்த்த தயார்படுத்தல், அனர்த்தக் குறைப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் போன்ற விடயங்களை மையப்படுத்தியவாறு இடம்பெறவுள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இக்கற்கை நெறியானது மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு முதற்கட்டமாக இடம்பெறவுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், அனர்த்த முகாமைத்துவ சட்டம், அவசர கால நிலைமையில் எவ்வாறு செயற்படுதல், முதலுதவி, நீச்சல் பயிற்சி மற்றும் அனர்த்தங்களை தடுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடையங்கள் தொடர்பாக இக் கற்கை நெறியின்போது வளவாண்மையும், செயல்முறை பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
குறித்த கற்கைநெறியின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு அதிதிககளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் பாத்திமா றிப்கா ஸபீன் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
25 நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த கற்கை நெறியில் திணைக்களங்களின் உயரதிகாரிகளும், பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு வளவாண்மை மேற்கொள்ளவுள்ளதுடன், கற்கை நெறியினை பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கு பெறுமதிவாய்ந்த சான்றிதலும், வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments