"பெடிகலோ ஹேண்ட்லூம்" நெசவுக் கைத்தொழிலை முன்னேற்ற நடவடிக்கை........
மட்டக்களப்பு மாவட்டத்தில் "பெடிகலோ ஹேண்ட்லூம்" என்ற உற்பத்தி நாமத்துடன் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று (21) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான விடயங்களை உள்வாங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
நெசவுக் கைத்தொழிலுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் சாரம், சாரி, படுக்கை விரிப்பு, போன்றவற்றை உற்பத்தி செய்வதில் சுமார் 650 சுயதொழில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விசேடமாக களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகமாக நெசவு உற்பத்திகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின் போது பிரதேச செயலக மட்டத்தில் புடவை உற்பத்தி, நெசவாளர்களின் தரவுகளை சேகரித்து தரவுத்தளம் ஒன்றை தயாரித்தல், இயங்காத நிலையில் உள்ள நெசவுக் கைத்தொழில் நிலையங்களை மீள இயங்கச் செய்து, புதிய வடிவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் நெசவு உற்பத்திகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல், தொழில் பயிற்சியின் பின்னர் குறைந்தது 50 வீதமானவர்கள் தொடர்ந்தும் இக்கைத்தொழிலை மேற்கொள்ளுதல், உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து பிரதேசமட்ட சமவாசத்தை அமைத்தல், "பெடிகலோ ஹேண்ட்லூம்" என்ற உற்பத்தி நாமத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுதல் என்பன குறித்த செயல்திட்டத்தை தயாரிக்குமாறு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நெசவுக் கைத்தொழில் உற்பத்திகளை நெய்வதற்கான நூல் மற்றும் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் என்பவற்றின் பற்றாக்குறையினால் நெசவுக் கைத்தொழில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உற்பத்திகளின் சந்தை வாய்ப்பு என்பவற்றின் சவால்கள் தொடர்பாக சிறுகைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் கீதா சுதாகரன், மாவட்ட சிறு கைத்தொழில் பிரிவின் இணைப்பாளர் நிலோசன், பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் தலைவி கே. தில்லையம்மா, டெவ்ப்ரோ நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளர் ஆர்.சிவாஸ்கரன் உட்பட கூட்டுறவு சமூகங்கள், நெசவுக் கைத்தொழில் உற்பத்தியாளர்கள், பயிற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நெசவு கைத்தொழில் அபிவிருத்திக்கு ஒக்ஸ்பேம், டெவ்ப்ரோ, ஐஓஎம் போன்ற அமைப்புக்கள் நிதி மற்றும் தொழிற்பயிற்சிக்கான அனுசரணைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment